அம்பானி, அதானி உருவப் பொம்மைகள் எரிப்பு… அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு- AIKSCC - தமிழ் நாடு அமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


மத்திய பாஜக அரசு அனைத்து திசைகளிலிருந்தும் வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளது. இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயிலில் அதே இடத்தில் தங்கியிருந்து வெட்ட வெளியில் உண்டு,கழித்து,உறங்கி எட்டு நாட்களாக மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்திருத்த மசோதா2020 ஐயும் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்ப மாட்டோம் எனப் போராடி வருகின்றனர். பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. மோடி தலைமையிலான அரசைக் கண்டிக்கும் வகையிலும் போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையிலும் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

1) பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோர் உருவபொம்மைகள் எரிப்பு:

இந்திய விவசாயத்தை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து இந்திய விவசாயிகளை கார்பரேட் அடிமைகளாக மாற்றும் 3 வேளாண் விரோத சட்டங்களையும், வேளாண்மைத் தொழிலுக்கு உயிர் நாடியாக இருக்கும் மின்சாரத்தை வணிகப் பண்டமாக்குகிற மின் மசோதா2020 ஐயும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டங்களால் தமது வாழ்வாதரம் முற்றாக அழிந்து விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. 

வாட்டுகிற கடுங்குளிரில் வெட்ட வெளியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரச இழுத்தடித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடியின் அரசு, அம்பானி, அதானி போன்ற கார்பரேட்களின் கொள்ளைலாபத்திற்காக மட்டுமே செயல்படுவதால் இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை டிசம்பர் 5/2020 அன்று இந்தியா முழுவதும் எரித்து, எதிர்ப்பு தெரிவிப்பதென AIKSCC அகில இந்திய செயற்குழு அறிவித்துள்ளது. AIKSCCயின் தலைமைக்குழு முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோர் உருவபொம்மைகள் எரிப்புப் போராட்டம் நடத்துவது.

வாட்டும் குளிரில் வதை பட்டு வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி பாஜக தலைமையிலான இந்திய அரசு தீர்வு காண வேண்டும் . இந்திய விவசாயிகளை கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தும் 3 வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் துணை செய்தது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு.

 • இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். • வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர்-9 /2020 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர்காத்திருப்புப் போராட்டம் தொடங்குவதுஎன்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.