அமேசானின் அட்டூழியம்! ஒரு தேங்காய் சிரட்டை விலை 1365 ரூபாயாம்!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், ஒரு தேங்காய் சிரட்டையை ரூ.1,300-க்கு விற்பதால், இந்திய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், அவ்வப்போது இந்திய வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. இதன்படி, சில மாதங்களுக்கு முன் காய்ந்த வரட்டியை அமேசான் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதை பலரும் கிண்டல் செய்த நிலையில், தற்போது புதியதாக ஒரு அதிரடி விளம்பரத்தை அமேசான் வெளியிட்டுள்ளது.

 

  இதயம் பலகீனமான வியாபாரிகள், கொஞ்சம் பொறுமையாக படிங்க. அதாவது, ஒரு தேங்காய் சிரட்டையை ரூ.1,300 என்ற தள்ளுபடி விலையில் விற்பதாக, அமேசான் ஒரு விற்பனை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதுவும், அந்த சிரட்டையின் உண்மை விலை ரூ.3,000 ஆயிரம் என்றும், அதை தள்ளுபடி விலையில் தருவதாகவும் கூறியுள்ளது.

 

மேலும், இயற்கையில் விளைந்த தேங்காய் சிரட்டை இது என்றும், இதில் சில விரிசல்கள், குறைகள் இருக்கலாம் என்றும் அமேசான் விவரம் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை கிண்டல் செய்து, இந்திய மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தேங்காய் பயன்படுத்தியபின், உபயோகமற்ற பொருளாக, குப்பையில் வீசப்படும் தேங்காய் சிரட்டைக்கு இவ்வளவு விலையா என இந்தியர்கள், நம்ப முடியாமல் புலம்பி வருகின்றனர்.

 

‘’எந்த பயனும் இல்லாத தேங்காய் சிரட்டைக்கு இவ்வளவு விலை கிடைக்குமா? எங்கள் வீட்டில் நிறைய சிரட்டைகள் உள்ளன. அமேசான் இப்பவே வந்து வாங்கிக் கொள்ளலாம்,’’ என்று, பலரும் ட்விட்டரில் கேலி செய்கின்றனர். ‘’தேங்காய் சிரட்டை விற்றே கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்றும், இதுதெரியாமல் கஷ்டப்பட்டு அலுவலகம் சென்று வருகிறேன்,’’ என்றும், மற்றொரு பதிவர் ட்விட்டரில் கூறியுள்ளார். 

 

‘’கேரளாவில் நிறைய தேங்காய் சிரட்டைகள் கிடைக்கும், கேரள மக்கள் இவற்றை ஆன்லைனில் விற்று நிறைய காசு சம்பாதிக்கலாம்,’’ என ஒரு பதிவர் தெரிவித்துள்ளார். இதேபோல, இன்னும் சில ட்விட்டர் பதிவர்கள், கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், அமேசானில் தேங்காய் சிரட்டையும், அப்பல்லோ மருத்துவமனையில் இட்லியும் விற்றால் போதும், என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

 

  அதேசமயம், தேங்காய் சிரட்டைக்கு ஆன்லைனில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பதே உண்மை. கிராமங்களில் விறகுக்கு பதில் சிரட்டைகள் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்படும். சில இடங்களில் கரியாக்க சிரட்டைகள் உபயோகமாக இருக்கும்.