அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்குத் தடை..! கோரிக்கை விடும் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனைகளை தடை செய்யக்கோரி இந்திய வர்த்தகர்கள் அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தினர்.


இணைய வணிக நிறுவனமான பிளிப்கார்ட், மற்றும் அதன் போட்டியாளரான அமேசான் மற்றும் பல நிறுவனங்கள் நடத்தும் பண்டிகை கால இணைய விற்பனைக்கு தடை கோரி வர்த்தகர்கள் அமைப்பு CAIT அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனங்கள் வழங்கி வரும் தள்ளுபடி விற்பனைகள் அந்நிய நேரடி முதலீட்டு ஒப்பந்தங்களின் படி விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பிளிப்கார்ட் நிறுவனம் தனது "தி பிக் பில்லியன் டே" விற்பனையின் தேதிகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற பிற இணைய வணிக நிறுவனங்கள் நடத்தும் பண்டிகை கால விற்பனைக்கு " தடை" கோரி தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. 

செப்டம்பர் 29 முதல் தீபாவளி மற்றும் தசராவிற்காக அதன் வருடாந்திர ஆறு நாள் விற்பனை நடைபெறும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது, அமேசான் தனது வருடாந்திர பம்பர் விற்பனைக்கான தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த காலகட்டங்களில், பண்டிகை காலங்களில் இந்தியர்கள் பெரிய கொள்முதல் செய்ய முனைவதால் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஈ-காமர்ஸ் தளங்கள் அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.

இந்த ஆண்டு விற்பனையில், முன்னணி வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் வட்டியில்லா தவணை உள்ளிட்ட பல்வேறு கடன் சலுகைகள் மூலம் 50 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகையான சலுகைகளை பெறுவார்கள்,

”என்றும் ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கும் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகின்றன ”என்று பிளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஈ-காமர்ஸ் தளங்கள் "வெளிப்படையாக அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறுவதால், அத்தகைய திருவிழா விற்பனைக்கு தடை விதிக்க உத்தரவிடப்பட வேண்டும் எனவும், மேலும் இந்த நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை எவ்வாறு மீறுகின்றன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) எச்சரித்துள்ளது.

மணியன் கலியமூர்த்தி