குழந்தை பாக்கியம வேண்டுமா..? அமாவாசை கோயிலுக்கு வாங்க...

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பல தலங்களுக்கும் சென்று வந்திருக்கலாம்.


அவர்கள் கடைசியாக முயற்சி செய்ய வேண்டிய தலம், காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழி மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப்பெருமாள் கோயில். இங்குள்ள தாயார், வறுத்த பயிரை முளைக்க வைப்பவள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறாள். வறுத்த பயிரே முளைக்கும் என்றால், மகப்பேறும் உறுதியாகலாம் அல்லவா!

தல வரலாறு: ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு அவனைத் தடுத்தது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தறுவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம், சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலது தொடையில் வைத்து, தீ வைத்து ஈமக்கிரியை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. (ஏனெனில், பூமிக்கு வெப்பத்தைத் தாங்கும் சக்தியுண்டு) எனவேதான் இங்கு தாயார் சந்நிதி பெருமாளுக்கு இடதுபுறமும், ஆண்டாள் சந்நிதி (பூதேவி அம்சம்) பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்குள்ள தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி எனப்படுகிறது.

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவுடன் அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால், அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளன. ‘புள்’ என்றால் ‘ஜடாயு பறவை’. ‘குழி’ என்றால் ‘ஈமக்கிரியை செய்தல்’. இத்துடன் ‘திரு’ என்ற அடைமொழியை மரியாதைக்காக சேர்த்து, திருப்புட்குழி ஆனது. ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது. ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோருக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவர் விமானத்தை ‘விஜய வீர கோட்டி விமானம்’ என்கின்றனர்.

இங்குள்ள தாயார் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறாள். குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் அமாவாசை அன்று, காட்டன் புடவை கட்டி நீராட வேண்டும். கோயிலில் தரும் வறுத்த பயிரை புடவை தலைப்பில் கட்டிக்கொண்டு விரதம் இருக்க வேண்டும். மறுநாள் காலை மீண்டும் குளித்து பயிரைத் தாயார் சந்நிதி முன் கொட்ட வேண்டும். அது முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இதை ‘அமாவாசைக் கோயில்’ என்றும், ‘புத்திரபாக்கியக் கோயில்’ என்றும் அழைக்கின்றனர்.

கல்குதிரை: இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. இது மூன்று தனித்தனி பகுதிகளை உடையது. சிற்பக்கலையில் இது ஓர் அதிசயம். உண்மையான குதிரை போலவே தோற்றமளிக்கும். இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவரது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவுடன் அருள்பாலிக்கிறார்.

திருமாலின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையானது. பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் மரியாதை உண்டு. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வேதாந்த தேசிகர் என்னும் வைணவ ஆச்சாரியார், இத்தலப் பெருமானை ‘பரமார்த்த ஸ்துதி’ என்னும் பாடலால் போற்றியுள்ளார்.