அரசு ரகசியத்தை கசியவிட்டாரா எடப்பாடி? முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து!

ரகசியத்தை கசியவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்துள்ள புகாரால் அவரது பதவிக்கு ஆபத்து என்று திமுகவினர் கூறி வருகின்றனர். (மேலும் படிக்க மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்க)


சேலத்தில் நேற்று அதிமுக – பா.ம.க செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது இரண்டு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 13ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அவர் கூறினார்.

தேர்தல் அறிவித்த ஒரேமாதத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தனக்கு கிடைத்த தகவல் அப்படித்தான் இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதன் மூலம் தேர்தல் தேதியை முதலிலேயே எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் தனக்கு கிடைத்த தகவல் படி என்று முதலமைச்சர் கூறியிருப்பது அதிகாரிகள் கூறியதை தான் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். தேர்தல் தேதி குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் என்ற முறையில் எடப்பாடியிடம் கூறியதை அவர் வெளியிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இது பதவி ஏற்பின் போது அவர் செய்து கொண்ட பதவிப் பிரமாணம், மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் புகார் அளிக்க உள்ளதாக திமுக தரப்பு கூறியுள்ளது. 

ரகசியத்தை எடப்பாடி வெளியிட்டதாக எழுந்த புகார் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி நிச்சயமாக அப்படி செய்திருக்கமாட்டார் என்று பதில் அளித்துள்ளார்.