அழகிரி அழைப்பு ஆரம்பம்… திகிலில் தி.மு.க. நிர்வாகிகள்.

இத்தனை நாளும் அமைதியாக இருந்த மு.க.அழகிரி, இப்போது மீண்டும் அரசியல் அரிதாரம் பூசத் தொடங்கிவிட்டார். புதிய கட்சி குறித்து ஆலோசனை நடத்த, ஆதரவாளர்கள் அனைவரும், ஜன., 3ல் மதுரை வாருங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.


தி.மு.க.வில் இனிமேல் இணையவே வாய்ப்பு இல்லை என்று அழகிரி தெரிவித்துவிட்டார். அதனால் அதிருப்தியடைந்த அழகிரி ஆதரவாளர்கள், கருணாநிதி பெயரில் புதிய கட்சி துவங்கி, தென் மாவட்டங்களில், தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க வேண்டும் எனன்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு அழகிரியும் பச்சைக்கொடு காட்டிவிட்டார். ஆகவே, தன்னுடைய ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் அழகிரி கையெழுத்துப் போட்ட கடிதம் அனுப்பிவருகிறார்.

அந்த கடிதத்தில், 'வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். 'தமிழகம் முழுதும் உள்ள ஆதரவாளர்கள், ஜன., 3ல் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள, துவாரகா பேலசில் தவறாமல் பங்கேற்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதில் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக கலந்துகொள்ளவில்லை என்றாலும், தங்களுடைய பிரதிநிதிகளை கலந்துகொள்ளச் சொல்லி ஆழம் பார்ப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் பா.ஜ.க.வும் உதவி செய்யத் தயாராக இருப்பதால் குஷியில் இருக்கிறார் அழகிரி.