சொந்த மருமகனுக்கே மரண தண்டனை விதித்த சேதுபதி மன்னன். மகள்கள் நினைவாக உருவாக்கிய அக்கா மடம், தங்கச்சி மடம் எங்குள்ளது தெரியுமா?

இராமேஸ்வரம் இராமாயணத் தொடர்புடைய புனித பூமி. அதன் தலைநகர் இராமநாதபுரம்.


அங்கிருந்து ஆட்சி புரிவோருக்கு ‘சேதுபதி என்கிற பட்டம் உண்டு. புகழ்பெற்ற ‘ரகுநாத கிழவன் சேதுபதிக்குப் பின், அரியணை ஏறியவர், முத்து விஜய ரகுநாத சேதுபதி.

இராமநாதபுரம் அரண்மனையின் தர்பார் மண்டபச் சுவர்கள் முழுக்க ஏராளமான புராண, இதிகாச, இலக்கிய வண்ண ஓவியங்கள் இன்றளவும் சிறப்பாகக் காட்சியளிக்கின்றன. இவற்றை வரைவித்தவரும் இம்மன்னர்பிரானே. இந்த முத்து விஜய ரகுநாத சேதுபதிதான், ஆட்சிச் செங்கோலில் அணுவளவும் கோணல் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, எவருமே செய்யத் துணியாத அருஞ்செயல் ஒன்றைச் செய்தார். அதன் காரணமாகவே வரலாற்று நூல்கள் இம்மன்னனை  ‘இன்னொரு மனுநீதிச் சோழன் என்று போற்றிக் கொண்டாடுகிறது. முத்து விஜயரகுநாத சேதுபதிக்கு, சீனி நாச்சியார், இலட்சுமி நாச்சியார் என இரு புதல்விகள் இருந்தனர். இருவரையுமே தண்டத்தேவர் என்பவருக்கு மணம் செய்து வைத்தார்.

அத்துடன் மருமகனுக்கு இராமேஸ்வரம் புனிதத் தீவின் ஆட்சிப் பொறுப்பையும் ஒப்படைத்தார். ஆளுநர் என்கிற வகையில் தண்டத்தேவர், இராமநாதர் ஆலய நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும். அறப்பணிகளிலும் ஒரு சிறு குறையும் நேர்ந்துவிடக்கூடாது. பாரத தேசம் முழுவதிலிருந்தும் அங்கு வந்து குவிகிற பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர வேண்டும். இதுதான் சேதுபதி மருமகனுக்கு இட்ட கட்டளை. தண்டத்தேவரும் அனைத்து அறப்பணிகளையும் சிறப்பாகவே நிர்வகித்து வந்தார்.

அந்தக்காலத்தில் வட தேசங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இன்று போலவே இராமேஸ்வரம் வந்து, இராமநாதரை தரிசிப்பதைத் தங்கள் ஆன்மிகக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். வண்டி, வாகன வசதிகள் அதிகம் இல்லாத அந்த நாட்களில் பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாகவே இராமேஸ்வரம் வருவது வழக்கம். இவர்கள் தங்கி இளைப்பாற ஆங்காங்கே ஏராளமான சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சத்திரங்களில் அனைத்தும் இலவசம்.

சேதுபதியின் மாப்பிள்ளை தண்டத்தேவர், பாம்பனிலிருந்து இராமேஸ்வரம் ஆலயம் வரை செல்லும் சாலையை நன்கு செப்பனிட வேண்டும் என்று எண்ணினார். அதற்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதனால்  ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரிகர்களிடம், வரி என்ற பெயரில் பணம் பிடுங்கினார். விஷயம், சேதுபதிக்கு எட்டியது. மருமகன் என்றும் பாராமல், அவருக்கு, மரண தண்டனை விதித்தார். அவருடைய மனைவியரான, சேதுபதியின் புதல்விகளான இருவரும், கணவருடன் உடன்கட்டை ஏறினர்.  

முத்து விஜயரகுநாத சேதுபதிக்கு பின்னால் வந்த சேதுபதிகள், பிராணத் தியாகம் செய்த சீனு நாச்சியார் மற்றும் லட்சுமி நாச்சியார் பெயரில் இரண்டு ஊர்களை நிறுவி, அங்கு இரு மடங்களை யாத்ரிகர்கள் நன்மைக்காக அமைத்தனர். அவைதான் இன்றளவும் புகழுடன் திகழ்கின்ற அக்கா மடம், தங்கச்சி மடம்  தங்கச்சி மடத்தில் ஏகாந்த இராமர் கோயில் இருக்கிறது.