பொங்கல் ரேஸ்! பேட்ட பராக் உறுதி! விஸ்வாசம் ரிலீஸ் டேட் மாறியது!

பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் எதிர்பாத்த திரையரங்குகள் கிடைப்பது சந்தேகம் என்று தெரியவந்த காரணத்தினால் முன்கூட்டியே வெளியாக உள்ளது.


கடந்த ஆண்டு அஜித் – சிவா கூட்டணியில் விஸ்வாசம் என்கிற பெயரில் படம் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு துவங்கவே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தாமதம் ஆனது. அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் என்கிற தடைகளை எல்லாம் தாண்டி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. முதலில் 2018 தீபாவளி விருந்தாக விஸ்வாசம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆனதால் வெளியீடு பொங்கலுக்கு தள்ளிப்போடப்பட்டது.   தற்போது படப்பிடிப்பு முடிந்து அனைத்து போஸ்ட் புரடக்சன் வேலைகளும் நிறைவு பெற்று விஸ்வாசம் படம் தயார் நிலையில் உள்ளது. படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி படத்துடன் அஜித் படம் போட்டி போடக்கூடிய நிலை உருவானது.

   ஆனால் திரையரங்குகளை பொறுத்தவரை விஸ்வாசத்தை விட பேட்ட படத்தை வெளியிடவே உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விஸ்வாசம் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்சை விட பேட்ட படத்தை தாயரித்துள்ள சன் பிக்சர்ஸ் வசம் அதிக திரையரங்குகள் உள்ளன. மேலும் சன் டிவி என்கிற மிகப்பெரிய பேனரும் இருப்பதால் சன் பிக்சர்சை பகைத்துக் கொண்டு சத்யஜோதி பிலிம்சின் விஸ்வாசம் படத்தை வெளியிட முன்னணி திரையரங்குகள் தயாராக இல்லை.   இந்த நிலையில் தான் விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சன் டிவிக்காக வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் விஸ்வாசம் படம் பொங்கல் ரேசில் இருந்து விலக முன்வந்துள்ளது. பொங்கல் 14ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ரஜினியின் பேட்ட வெளியாவது உறுதியாகிவிட்டது. அதே சமயம் ஜனவரி 10ந் தேதி வியாழனன்று அதாவது பொங்கலுக்கு 4 நாட்கள் முன்னதாக விஸ்வாசத்தை வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.  10 முதல் 13ந் தேதி வரையிலான 4 நாட்களுக்கு முன்னணி திரையரங்குகள் கிடைத்தால் போதும் வசூலை அள்ளிவிடலாம் அதன் பிறகு பொங்கல் விடுமுறை சமயத்தில் ஓரளவு திரையரங்குகள் கிடைத்தாலே போதும் படம் நல்ல வசூலை குவிக்கும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் நம்புகிறது. இதனால் ரஜினியின் பேட்ட படத்திற்கு 4 நாட்கள் முன்னதாகவே விஸ்வாசம் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.