விஸ்வாசம் பார்த்துக் கொண்டிருந்த போது அஜித் ரசிகர் தியேட்டரிலேயே சுருண்ட விழுந்து உயிரிழந்துள்ளார்.
விஸ்வாசம் தியேட்டரில் சுருண்டு விழுந்து அஜித் ரசிகர் மரணம்! நண்பர்கள் அதிர்ச்சி!
கோவையைசேர்ந்தவர் ராம் குமார். இவர் தீவிரமான அஜித் ரசிகர்.
இவர் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு பொங்கலை கொண்டாட சென்றுள்ளார். ஏற்கனவே ஒரு முறை
விஸ்வாசம் படத்தை பார்த்த ராம்குமார் மீண்டும் புதுச்சேரியில் நண்பர்களுடன் அந்த படத்தை
பார்க்க முடிவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் எடுத்த
ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
பிறகு போதையிலேயே
நண்பர்களுடன் விஸ்வாசம் ஓடும் தியேட்டருக்கு சென்றுள்ளார் ராம்குமார். படம் போட்டதும்
அஜித்தை பார்த்த உற்சாகத்தில் விசில் அடித்தபடி உற்சாக மிகுதியில் உரக்க கத்தியுள்ளார்
ராம்குமார். பின்னர் ஒரு கட்டத்தில் அப்படியே மூர்ச்சையாகி தான் அமர்ந்திருந்த சேரிலேயே
மயங்கி விழுந்துள்ளார் ராம்குமார். போதையில் ராம் குமார் மட்டையாகிவிட்டதாக அவரது நண்பர்கள்
நினைத்துள்ளனர்.
இடைவேளையின் போது
எழுப்பிய நிலையிலும் ராம்குமார் எழவில்லை. அவருடன் வந்திருந்த நண்பர்களும் போதையில்
இருந்த காரணத்தினால் நிகழ்ந்த விபரீதம் அவர்களுக்கு தெரியவில்லை. பின்னர் படம் முடிந்த
பிறகு ராம்குமாரை சக நண்பர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் எவ்வளவு எழுப்பியும் ராம்குமார்
எழவில்லை. இதனால் பயந்து போன அவர்கள் திரையரங்க ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
அவர்கள் வந்து சோதித்த
போது ராம்குமார் உயிரிழந்துவிட்டத தெரியவந்தது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் ராம்குமார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு
அனுப்பி வைத்தனர். நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில்
கத்தியவன் அப்படியே சரிந்து சேரில் அமர்ந்ததாகவும், சரி போதையில் மயங்கிவிட்டதாக தாங்கள்
கருதியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராம்குமாரின் பிரேதப்பரிசோதனை
அறிக்கை கிடைத்த பிறகு தான் அவரது மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார்
கூறியுள்ளனர்.