அன்று தேவர் மகன்! இன்று விஸ்வாசம்! வசூலில் ரஜினியை வீழ்த்திய அஜித்!

சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தமிழக சினிமாவில் புதிய சாதனை சத்தமின்றி நிகழ்த்தப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில், கடந்த 30 ஆண்டுகளாக, ரஜினிகாந்த் மட்டுமே நிரந்தர சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அவரது படங்கள் மட்டுமே புதுப்புது சாதனைகளை நிகழ்த்துவது வழக்கம். இதனால், சூப்பர் ஸ்டார் என்பதை கடந்து, வசூல் மன்னன் என்றே ரஜினியை பலரும் அழைப்பார்கள். அவரது சமகாலத்திய நடிகரான கமல்ஹாசன், விஜயகாந்த் போன்றவர்களால் கூட இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்த முடியாது. ஆனால், ரஜினிகாந்த் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சாதனையை தக்க வைத்து வருகிறார். 

இந்த சூழலில், 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்குமார் நடிப்பில் விஸ்வாசம் படமும், ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் போட்டியில் இறங்கின. விஸ்வாசம் படம் ஊத்திக்கும் எனப் பலரும் கூறிவந்த நிலையில், கடந்த 9ம் தேதியன்று இவ்விரு படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டன. 

இதில், முதல் ஷோவில் இருந்தே விஸ்வாசம் படம், அஜித் ரசிகர்களை கடந்து, பல தரப்பிலும் சென்டிமென்ட், ஆக்சன் காரணமாக, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், அந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. அதேசமயம், ரஜினியின் பேட்ட படமும் அவரது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. இருந்தும், பாக்ஸ் ஆபிஸ்வசூலில், தமிழகம் முழுக்க, ‘தூக்குதுரை’ தூக்கி அடிக்கிறார். பேட்ட படத்தின் வசூல் 2வது இடத்தில்தான் உள்ளது. குறிப்பாக, ஓபனிங் டே கலெக்‌ஷனில், ரஜினி படத்தை, அஜித் படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

கடந்த 1992ம் ஆண்டு ரஜினியின் பாண்டியன் படமும், கமல் நடித்த தேவர்மகன் படமும் போட்டிபோட்டன. அப்போது, தேவர்மகன் படம் வசூலில், பாண்டியன் படத்தை பின்னுக்குத் தள்ளியது. இதற்கு அடுத்து 2வது முறையாக, தற்போது ரஜினி படத்தை, வசூல் ரீதியாக அஜித் படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன்மூலமாக, ரஜினிக்கே சவால் விடும் நடிகராக, அஜித்குமார் உருவெடுத்துள்ளார். அவரது ரசிகர்கள், ‘தல எப்பவும் தலதான்’ என உற்சாகமாக, சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

  தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலை, மற்றபடி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு வசூல் நிலவரத்தை வைத்து பார்க்கும் போது விஸ்வாசம் படத்தை விட பேட்ட படத்தின் வசூல் தான் டாப் என்கிறார்கள்.