கேன்டீன் உணவு பொருட்களில் அஜினோமோட்டோவை அதிக அளவில் கலப்பதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஹாஸ்டல் சாம்பாரில் கொட்டப்படும் அஜினோமோட்டோ - போராட்டத்தில் ஜேப்பியார் கல்லூரி மாணவர்கள்

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் புகழ் பெற்ற கல்லூரியான ஜேப்பியார் எஸ்.எஸ்.ஆர் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியை ரெஜினா ஜேப்பியார் நடத்தி வருகிறார். இங்கு மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை.
ஆனால் மாணவர்களிடம் இருந்து அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இதே கல்லூரியில் கேண்டீனில் தயாரிக்கப்படும் சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்தது.
இதனை கண்டித்து மாணவர்கள் பேரணி நடத்தினர். தற்போது உணவு சம்பந்தப்பட்ட அடுத்த புகார் எழுந்துள்ளது. அதாவது உணவில் சுவையை அதிகமாக்கும் அஜினோமோட்டோவை அதிகமாக கலந்து உணவின் தரத்தை கெடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவர்கள் கல்லூரியில் பேரணியாக சென்று கல்லூரி கண்ணாடிகளை உடைத்து சுக்கு நூறாக்கினர். மேலும் நேரங்கள் கண்ணாடிகளையும் உடைத்தனர்.
இந்த சம்பவமானது இந்த கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து முதலில் ஒப்பு கொள்ளாத கல்லூரி நிர்வாகம், பின்னர் மாணவர்கள் சுமுகமான முறையில் கலைந்து சென்றுவிட்டதாக கூறினர்.