விஸ்வரூம் எடுக்கும் ஜியோ! போட்டியை சமாளிக்க ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

டெல்லி: ஜியோ உடனான வர்த்தகப் போட்டியை சமாளிக்கும் வகையில் நேரடி மோதலில் இறங்க உள்ளதாக ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


வாடிக்கையார் எண்ணிக்கை மற்றும் வருமானம் அடிப்படையில் பல ஆண்டுகளாக, இந்திய தொலைத்தொடர்பு சேவையில் முன்னிலை வகித்து வந்த ஏர்டெல் நிறுவனத்திற்கு, பேரிடியாக ரிலையன்ஸ் ஜியோ வந்தது. சேவை தொடங்கிய நாள் முதலாக, பல அதிரடி சலுகைகளை அறிவித்ததன் மூலமாக, ஏர்டெல் வாடிக்கையாளர்களை பலரும் ஈர்த்த ஜியோ, தற்போதைய நிலையில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதனால், ஏர்டெல்லின் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, வோடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதால், ஏர்டெல்லுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் புதியதாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஆம், நாடு முழுவதும் உள்ள தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தி, வருவாயை அதிகாரிக்கும் வகையில், 3ஜி நெட்வொர்க் சேவையை  மூட முன்வந்துள்ளது.

இதன்படி, ஏர்டெல் 3ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாறும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 3ஜி பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலமாக, 4ஜி சேவையை வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைய நேரிட்டாலும், வருமானம் அதிகளவில் கிடைக்கும் என ஏர்டெல் குறிப்பிடுகிறது.

ஏற்கனவே, ஒவ்வொரு சிம் பயன்பாட்டாளரும் மாதந்தோறும் கட்டாயமாக ரூ.35க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தியதன் மூலமாக, வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தாலும், வருமானம் கணிசமான அதிகரித்திருக்கிறது. இதே முறையில், 3ஜி சேவையை மூடிவிட்டு, 4ஜி சேவையை அறிமுகம் செய்வது நல்ல பலன் அளிக்கும் என, ஏர்டெல் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

நிறுவனத்தின் சேவையை சலுகை முறையில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை இழப்பது ஒன்றும் தவறில்லை எனவும்,  வருமானமே முதன்மை இலக்கு எனவும் ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல் குறிப்பிட்டுள்ளார். சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில், ஏர்டெல் நிறுவனம், நிகர லாபம் ஏதுமின்றி, ரூ.2,866 கோடி நஷ்டத்துடன் உள்ளது.

இது கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முதல் நஷ்டமாகும். இதையடுத்தே, தனது சேவை மனப்பான்மையை சற்று தள்ளிவைத்து விட்டு, வருமானத்தை அதிகரிப்பதில் நிறுவனம் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.