விவசாயிகளுக்கு கடனே கிடைக்கலை, அதுக்குள்ள எப்படிங்க பிரிமியம் கட்டுறது..? போர்க்கொடி தூக்கும் விவசாய சங்கம்.

பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பிரிமியம் கட்டுவதற்கான காலக்கெடு ஜுலை 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.


ஆனால் பாதிக்கு மேற்பட்ட விவசாயிகளால் உரிய காலத்திற்குள் பிரிமியம் செலுத்த முடியவில்லை என்பதால் கால நீட்டிப்பு தரவேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பெ.சண்முகம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

வழக்கமாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெரும் போது பிரிமியம் பிடிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு கடன் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு மாற்றிவிட்டது. மத்திய கூட்டுறவு வங்கியில் தான் கடன் பெற முடியும், விவசாய கடன் அட்டை கட்டாயம், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டுமென்பது போன்ற நிபந்தனைகளால் பெரும்பகுதி விவசாயிகளால் கடன் பெற முடியவில்லை

பொதுமுடக்கம் காரணமாக, போக்குவரத்தும் இல்லாத சூழ்நிலையில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு விவசாயிகளால் செல்ல முடியவில்லை. மேலும் ஜுலை 24 முதல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரிமியம் பெறப்படவில்லை.

இந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய அரசு இலக்கு தீர்மானித்துள்ளது. ஆனால், ஜுலை 31ந் தேதி வரை இரண்டு லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே பிரிமியம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் உரிய காலத்தில் திறக்கப்பட்டதால் பல புதிய பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இத்தகைய விவசாயிகள் பிரிமியம் செலுத்த தயாராக இருந்தாலும் ஏற்கமறுப்பதாக புகார்கள் வந்துள்ளது.

எனவே, குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் வகையில் 15 நாட்கள் கால நீட்டிப்பு செய்யப்பட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.