ஆடிப் பெருக்கு எனும் அதிர்ஷ்ட தினம் - லட்சுமி கடாட்சம் பெருக வாங்க வேண்டிய பொருட்கள் என்ன தெரியுமா?

ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதை 'ஜலப்பிரவாக பூஜை' என்று கூறுவதுண்டு.


'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப இம்மாதத்தில்தான் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் துவக்குகிறார்கள்.ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்பார்கள்.

ஆடி மாதம் 18-ஆம் தினம் ஆடிப் பெருக்கு பன்னெடுங்காலமாக தமிழகத்தில் காவிரி ஆறு பாய்கின்ற கரையோரம் இருக்கும் ஊர்களில் வாழ்கின்ற மக்களால் கொண்டாடப் கொண்டாடப்பட்டு வருகிற ஒரு பாரம்பரிய விழாவாக இருக்கிறது. வரலாற்றுப்படி பார்க்கும்போது கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழகத்தில் பாயும் காவிரி ஆறு மற்ற மாதங்களில் சாதாரண அளவில் நதியாக ஓடினாலும், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி ஆறு ஓடும் நதிக்கரைகளில் இருக்கின்ற படித்துறைகளின் உயரத்தை தாண்டி தண்ணீர் பெருக்கு செல்லும். இறைவனின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடி உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஊட்டும் நாள் இந்நாள். இதன் அடிப்படையில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது.

காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குவர். திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணமாவதற்காக அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளும் வைபவமும் நடக்கும்.

இந்த விழாவை 18ம் தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன. 18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும். இந்நாளில் தீர்த்தமாடுவதன் மூலம், ஆன்மிக இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம். இந்த எண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது. அதனால், இந்நாள் நகை முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆடிப் பதினெட்டு என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு தினத்தன்று தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி பொருட்களை வாங்குவதால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அப்படி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கும் அளவிற்கு பணமில்லையென்றாலும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தவல்ல ஆற்றல் மிகுந்த பொருட்களான மஞ்சள் மற்றும் உப்பு போன்றவற்றை ஆடிப்பெருக்கு தினத்தன்று வாங்குவதால் வீட்டில் மங்களங்களும், சுபிட்சங்களும் பன்மடங்கு பெருகுவது நிச்சயம் என ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்

மாங்கல்யக் கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும். புதிய படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள்.