ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகைகள்!

சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் உடன் இணைந்து தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடினார் நடிகை இந்துஜா மற்றும் நடிகை அதுல்யா.


"உதவும் உள்ளங்கள் " என்ற ஒரு அமைப்பு வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்றுதிரட்டி ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். வருடம் தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் சுமார் 1222 குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நடிகை இந்துஜா மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோரும் இந்த விழாவில் இணைந்தனர். 

இந்த விழாவில் பங்கேற்ற நடிகை அதுல்யா ரவி பேசும் பொழுது, " உலகில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்துகொண்டால் அதற்கு பின்பு ஆதரவற்றோர் என்ற வார்த்தைக்கே இடமில்லை " என்று கூறியிருந்தார். ஆகவே நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் அதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் நம்மால் உயர்த்த இயலும் என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் நடிகை இந்துஜா பேசுகையில் , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாகப் போகிறது . இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது நான் மகிழ்ச்சி அடைந்த அதே அளவு மகிழ்ச்சி இந்த ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எனக்கு கிடைத்துள்ளது என்று கூறினார். மேலும் பேசிய இந்துஜா, இந்த அமைப்பின் நிறுவனரான சங்கர் மகாதேவனும் அமைப்பின் நலம் விரும்பியான கிருத்திகா ஸ்டாலினுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.