குடித்துவிட்டு கும்மாளம்! நடு ராத்திரியில் போலீசிடம் சிக்கிய பிரபல நடிகை!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகையை அபராதத்தை வாங்கிவிட்டு அனுப்பிய அபிராமபுரம் போக்குவரத்து போலீசார்.


குடிபோதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமை  போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின் போது பிடித்தனர். நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் காரை ஓட்டியது சோதனையில் தெரிய வந்துள்ளது.

நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். வயது 34. சார்லி சாப்ளின் படம் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். தற்போது அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள இவர் பாஜகவில் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் பதவியிலும் உள்ளார். இவர் நேற்று இரவு சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். 

இந்நிலையில், நேற்று இரவு அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று தாறுமாறாக வேகமாக போலீசாரை நோக்கி வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதித்தபோது நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. வாகனத்தின் கதவை திறந்தவுடன் மது வாசம் வீசியதால், மது அளவீட்டு கருவியில் சோதிக்க  ஒத்துழைக்குமாறு நடிகை காயத்ரியிடம் போலீசார் கேட்டனர்.

காயத்ரி கருவியில் ஊதியபோது மது அளவானது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இது குறித்து போலீசார் கேட்ட போது, அதை மறுத்த காயத்ரி, தான் குடிக்கவில்லை என்றும், பணியிலிருக்கும் போலீஸ்காரர்களை பார்த்து, நீங்கள்தான் குடித்திருக்கிறீர்கள்  என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதை தொடர்ச்சியாக பணியில் இருந்த போலீஸ்காரர் அளவீட்டு கருவிகள் ஊதி காட்டி, தான் குடிக்கவில்லை என கூறியுள்ளார்.

போலீசாருக்கும் நடிகை காயத்ரிக்கும் அரை மணி நேரமாக  வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில், தான்  குடித்ததை நடிகை காயத்ரி ஒப்புக்கொண்டார். மேலும் லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதற்காக நடிகை காயத்ரி மீது மோட்டார் வாகன சட்டம் 185 மற்றும் 181ன் படி அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குடிபோதையில் கார் ஓட்டியதற்கும், லைசன்ஸ் இல்லாமல் வந்ததற்கும் மொத்தமாக ₹3500 அபராதத்தை நடிகை காயத்ரியிடம் போலீசார் வசூலித்தனர் . தொடர்ந்து நடிகை காயத்ரியை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார், போக்குவரத்து காவலரை காயத்ரியின் வாகனத்திற்கு டிரைவராக அனுப்பி வாகனத்துடன் நடிகையை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.