சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை..! பிரபல நடிகையிடம் போலீஸ் விசாரணை! இரவு நடந்தது என்ன?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து போலீஸார் பிரபல நடிகை மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களை விசாரணை செய்து அவர்களுடைய வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி அண்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் தோனி மாதிரி நடித்து அசத்தியதால் இவரது இந்த திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம். 

இந்நிலையில் 34 வயதாகும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் உயிர் இழந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அந்த பிரேத பரிசோதனைகள் முடிவுகளும் வெளியாகியுள்ளது. நடிகர் சுஷாந்த் தூக்கிட்டு கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட போலீசார் தங்களுடைய தீவிர விசாரணையை துவங்கியுள்ளனர். முதலில் நடிகர் சுஷாந்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்கரபோர்த்தியை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசார் நடிகர் சுஷாந்த்தின் நெருங்கிய நண்பரான மகேஷ் ஷெட்டியையும் விசாரித்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக சுஷாந்த் அவரது நெருங்கிய நண்பரான மகேஷ் ஷெட்டிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அப்பொழுது அவரது போனை எடுக்கவில்லை. இந்த தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் அவர்கள் இருவரது வாக்குமூலங்களையும் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளனர். 

நடிகர் சுஷாந்த் சிங் இன் இறுதி ஊர்வலம் இன்று மாலை மும்பையில் அவர்களது உறவினர் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.