சூரரை போற்று ரிலீசுக்கு தடை..! இனி சூர்யா படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை! காரணம் ஜோதிகா..! எப்படி தெரியுமா?

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் OTT தளத்தில் வெளியிட்டால் இனி நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.


தமிழ்சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். அப்படியாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தை வெளியிட சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பாக ஆன்லைன் OTT தளங்களில் வெளியிடலாம் என நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை இரண்டு மடங்கு லாபத்திற்கு அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதன்மூலம் தயாரிப்புக் குழு தேவையான லாபத்தை சம்பாதித்து விட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவலை அறிந்த தியேட்டர் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திடம் போன் செய்து பேசினாராம். ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை எனவும் நேரடி டிஜிட்டல் ரிலீஸில் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்திப்பார்கள் எனவும் தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் திரையரங்க உரிமையாளர்களும் அதனை சார்ந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் பெரும் இழப்பை சந்திப்பார்கள் எனவும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஒருவேளை சூர்யா தங்களது கோரிக்கையை ஏற்காமல் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட்டால் இனிமேல் சூர்யாவின் திரைப்படங்களையும் அல்லது அவரது தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களையும் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.தற்போது இந்த சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சூர்யாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.