ரூபாய் ஒன்றரை லட்சம்! சின்மயிக்கு ரேட் பிக்ஸ் செய்த ராதாரவி!

பின்னணி பாடகி சின்மயிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ரேட் பிக்ஸ் செய்து ராதாரவி வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பின்னணி பாடகி சின்மயிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ரேட் பிக்ஸ் செய்து ராதாரவி வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

   பின்னணி பாடகியாகவும் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு குரல் கொடுப்பவராகவும் அசத்தி வருபவர் சின்மயி. அண்மையில் வெளியான 96 படத்தில் சின்மயியின் வேலை அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீ டூ மூலமாக பாடல் ஆசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீது சின்மயி கூறிய பாலியல் புகார்கள் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

   பாலியல் ரீதியாக தன்னை தொந்தரவு செய்தவர்களை மட்டும் அல்லாமல் டப்பிங் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வந்தார். அதுவும் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவிக்கு எதிராக பல பெண்கள் கூறிய பாலியல் புகார்கள் குறித்து சின்மயி பக்கம் பக்கமாக எழுதித்தள்ளினார். இதனை தொடர்ந்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார்.

   இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான ஆண்டு சந்தாவை செலுத்தாத காரணத்தினால் அவர் உறுப்பினர் சேர்க்கை இயல்பாகவே ரத்தாகிவிட்டதாக ராதாரவி விளக்கம் அளித்தார். இதனால் சின்மயி வேறு எந்த படத்திற்கும் டப்பிங் பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஏனென்றால் தமிழ் படங்களில் டப்பிங் பேச வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

   தற்போது சின்மயியின் உறுப்பினர் சேர்க்கை ரத்தாகிவிட்டதால் அவரால் தொடர்ந்து டப்பிங் பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக சின்மயி தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் சின்மயியை மீண்டும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சேர்ப்பதற்கு தயாராக இருப்பதாக ராதாரவி தரப்பு தெரிவித்துள்ளது.

   ஆனால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு சின்மயி ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தி உறுப்பினராக வேண்டும் என்று ராதாரவி தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. அதாவது சின்மயி மீண்டும் சங்கத்தில் சேர ராதாரவி தரப்பு ரேட் பிக்ஸ் செய்துள்ளது. இதற்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு முதல் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர் என்று கூறியுள்ளார்.

   அன்று முதல் தற்போது வரை தான் தொடர்ந்து சந்தா செலுத்தியுள்ளதாகவும் மேலும் தனது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை டப்பிங் கலைஞர்கள் சங்கம் பிடித்தம் செய்து வந்ததாகவும் சின்யி கூறியுள்ளார். அப்படி இருக்கையில் மீண்டும் தான் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து எதற்காக புதிய உறுப்பினராக சேர வேண்டும் என்று சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.