குடியுரிமை மசோதாவில் இலங்கைத் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் சேர்க்காதது ஏன்? கமல்ஹாசன் கேள்வி..!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் இணைக்காமல் பாகுபாடு காட்டுவது ஏன் ? என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் கடும் வாக்கு வாதத்திற்கு பின்னர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்றைய முன் தினம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. 

பாகிஸ்தான் , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர் சங்கத்தினர் மற்றும் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவசாகர் சார்ந்த பகுதியில் நிர்வாண போராட்டங்கள் செய்த மக்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதுமட்டுமில்லாமல் மணிப்பூர் தலைநகரிலும் போராட்டங்கள் வெடித்தது. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதா இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் பெரிய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமில்லாமல் நாடாளுமன்றத்திலும் மற்ற கட்சிகள் இந்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவின் படி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

 அவர்கள் நம் நாட்டில் குடியேறிய ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த உடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனவும் அந்த திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரது எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் ஏன் இஸ்லாமியர்களையும் ஈழத் தமிழர்களையும் இணைக்கவில்லை என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் ஏன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இத்தகைய பாகுபாடு மத்திய அரசு காண்பித்து வருகிறது எனவும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது கமலஹாசனின் இந்த புதிய தொடர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.