நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராக வேண்டும்- வருமானவரித்துறை சம்மன்!

நடிகர் விஜய் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தை அடிப்படையாக வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதாவது பிகில் திரைப்படத்தை இயக்கி தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விஜயின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை நடைபெறுவதற்கு முன்னதாக நடிகர் விஜய் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலியில் படமாக்கப்பட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர்கள் அனைவரும் கூடி இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டிலேயே சந்தித்து அவரை கையுடன் அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதனை அடுத்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர் . சோதனையின் போது தங்களுக்கு கிடைத்த ஆவணங்களை பற்றிய எந்த ஒரு தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை . மேலும் நடிகர் விஜய் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சினிமா துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை நடிகர் விஜய் வீட்டில் கிடைத்த ஆவணங்களை பற்றிய தகவல்கள் இன்று விசாரணையில் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.