பாடல்களுக்கான ரூ.200 கோடி ராயல்ட்டி! இளையராஜாவுடன் மோதும் நடிகர் விஜய்!

தான் இசை அமைத்த பாடல்களை வணிக நோக்கில் பயன்படுத்துவர்கள் தனக்கு ராயல்டி தொகை தர வேண்டும் என்று கூறி வரும் இளையராஜாவுக்கு எதிராக திடீரென நடிகர் விஜயின் பி.ஆர்.ஓவும், விஜயின் நீண்ட கால உதவியாளரும், தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் களம் இறங்கியுள்ளார்.


பி.டி செல்வகுமார் என்றால் தமிழ் திரையுலகில் தெரியாத நபர்களே இல்லை. ஏனென்றால் இவர் தான் நடிகர் விஜய்க்கும அவரது தந்தைக்கும் நிழல் போல் இருப்பவர். சுமார் 30 ஆண்டுகளாக விஜயின் உதவியாளராக இருந்தவர். மேலும் விஜய்க்கு பி.ஆர்.ஓவாகவும் பி.டி.செல்வகுமார் செயல்பட்டுள்ளார். அத்துடன் விஜயை வைத்து புலி படத்தை தயாரித்தவரும் பி.டி செல்வகுமார் தான்.

   நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது, பி.டி.செல்வகுமார் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. இதன் மூலம் நடிகர் விஜயின் பினாமி தான் பி.டி.செல்வகுமார் என்று கூறுபவர்களும் உண்டு.  அண்மையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தாமிரபரணி மகா புஷ்கரணி விழாவுக்கு சென்ற போது அவருடனேயே சென்று செய்தியாளர் சந்திப்பைஏற்பாடு செய்தவர் பி.டி.செல்வகுமார்.

   இந்த அளவிற்கு விஜய்க்கு நெருக்கமான செல்வகுமார் திடீரென சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது: பாடல்கள் மூலம் வரும் ராயல்டி தொகை தனக்கு சொந்தம் என்று சர்வாதிகாpu போல இசை அமைப்பாளர் இளையராஜா செயல்பட்டு வருகிறார். 500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா இசையில் சுமார் 5000 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்த படங்களின் பாடல்கள் உரிமையும் அந்தப் பாடல்கள் மூலம் வரும் அனைத்து வருவாயும் தனக்கு மட்டுமே வரவேண்டும் என்று இளையராஜா உரிமை கொண்டாடி வருகிறார்

    இளையராஜா வைத்து ஆரம்ப காலங்களில் பஞ்சு அருணாச்சலம், கே ஆர் ஜி, பாலச்சந்தர், பாரதிராஜா, ஆனந்தி பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் என பல தயாரிப்பாளர்களை தங்கள் படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இளையராஜா இசை அமைத்து வெளியான படங்களை போல பாடல்களும் வெற்றி பெற்றன. ஆனால் தற்போது பாடல்களுக்கான வருவாய் இளையராஜாவுக்கு மட்டுமே செல்கிறது. தயாரிப்பாளர்களை இளையராஜா ஏமாற்றி வருகிறார்.

    இளையராஜாவின் இசைக்கு முதலீடு அதாவது திரைப்படத்திற்கு செலவு செய்த பல தயாரிப்பாளர்கள் தற்போது மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். செலவு செய்து படம் எடுத்த தயாரிப்பாளர்களளுக்கு தான் அந்த படத்தில் உள்ள பாடல்களின் உரிமை இருக்கிறது. ஆனால் படத்திற்கு சம்பளம் வாங்கிக் கொண்டு இசை அமைத்த இளையராஜா அந்த பாடல்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார்.  இளையராஜாவை வைத்து எடுக்கப்பட்ட படங்களின் பாடல்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வர வேண்டும்.

 அந்த 200 கோடி ரூபாய் வராமல் தயாரிப்பாளர் பாதிப்படைந்துள்ளனர்.  இளையராஜா இசை அமைத்த பாடல்கள் மூலமாக  அவருக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுத் தர வேண்டும்.  கச்சேரியில் இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது, செல்போன் காலர் டியூன்களில்பயன்படுத்துவது என நிறைய வருமானம வருகிறது.

  அந்த வருமானத்தில் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்று இளையராஜாவை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். இளையராஜா நடிகர் விஜயின் காதலுக்கு மரியாதை படத்திற்கு இசை அமைத்தவர். அந்த படத்தின் பாடல்கள் மூலம் தான் விஜய் இளைஞர்களுக்கு அறிமுகம் ஆனார்.

   இந்த நிலையில் இளையராஜாவுக்கு எதிராக திடீரென விஜயின் பி.ஆர்.ஓ பி.டி செல்வகுமார் போர்க்கொடி உயர்த்தியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜயுடன் ஆலோசனை செய்யாமல் செல்வகுமார் இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கமாட்டார் என்றும் திரையுலகில் பேசுகிறார்கள்.