அவருடையே ஒரே ஆசை சொந்த வீடு தான்! வாங்கியும் குடியேறாமலேயே போய்விட்டார்! கலங்கிய ராஜசேகர் மனைவி!

நடிகர் ராஜசேகரின் ஒரே ஒரு ஆசை இறுதி வரை நிறைவேறவில்லை என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சின்னத்திரையிலும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளித்திரையிலும் ஜொலித்தவர் நடிகர் ராஜசேகர். கதாநாயகராக, இணை இயக்குநராக, குணச்சித்திர நடிகராக ராஜசேகர் அவர்கள் பல்வேறு பரிமாணங்களில் திரைத்துறையில் ஈடுபட்டிருந்தார்.

பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு ஆகிய படங்களை ராபர்ட் என்பவருடன் இணைந்து இயக்கினார். "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடலில் நடித்து திரையுலகில் பிரபலமடைந்தார். "சரவணன் மீனாட்சி" சின்னத்திரை தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கியபோது நடிகை சரண்யாவை விரும்பி திருமணம் புரிந்தார். 

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் தாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மாரடைப்பு காரணமாக ராஜசேகர் இன்று மதியம் இறந்து போனார்.

அவருடைய இரண்டாவது மனைவியான தாரா அளித்த பேட்டியில், "மூச்சுத்திணறலால் என்னுடைய கணவர் 2 நாட்களாக அவதிப்பட்டு வந்தார். எங்களிடம் பணம் இல்லாததால் 2 நாட்களாக சிகிச்சையை தொடங்கவில்லை. அதன் பின்னர் சீரியல் இயக்குநர் விக்ரமாதித்யன் பணம் அளித்த பிறகு சிகிச்சையை தொடங்கினார்கள். என் கணவர் பல ஆண்டுகள் சினிமாவிலிருந்தும் அவர் பணம் சம்பாதிக்கவில்லை.

அவருக்கு சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையிருந்தது. இவ்வளவு வருடங்களாக வாடகை வீட்டில் வாழ்ந்த நாங்கள், சென்ற ஆண்டு ஒரு சின்ன குடியிருப்பை வாங்கினோம். கிரஹப்பிரவேசம் மட்டுமே செய்து முடிக்கப்பட்டது. வீட்டிற்குள் குடியேறவில்லை. இறுதிவரை சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற என் கணவரின் ஆசை நிராசையாகவே முடிந்தது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

ராஜசேகரன் மறைந்ததற்கு பிரபல நடிகர்கள்,இயக்குநர்கள் ஆறுதல் தெரிவித்த வண்ணமுள்ளனர்.