கொரோனாவால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், வருமானம் இன்றி சிரமப்படும் பெண்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளனர். இதனால், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியோர், அதற்கான தவணையை செலுத்த, ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது.
அடாவடியாக கடன் வசூலிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் ஆவேசம்

ஆனால் கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் திரும்பவில்லை. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் மகளிர் சுய உதவிக் குழு பெண்களும், பொதுமக்களும் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் அடாவடியாக கடன் வசூலிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த கடன் வசூலிக்கும் ஊழியர்கள், கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று, கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டி, அடாவடியாக, கடன் தவணையை வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் வங்கி அதிகாரிகள் பெண்களை தகாத வார்தைகளால் பேசியும், வட்டிக்கு வட்டி போட்டும் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் சிறுகுறு தொழிலாளர்களிடம் இருந்தும் அசலுடன் கடன் தொகையை வசூலித்து வருகின்றனர். எந்த வருமானமும் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் கடன் தொகையை கேட்டு வங்கிகள் கட்டாயப்படுத்த கூடாது. கொரோனா தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மக்களிடம் இருந்து அசலையோ வட்டியையோ கேட்கக்கூடாது.
கடன் தொகையை வசூலிக்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அடாவடி வசூலில் ஈடுபட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் மற்றும் வங்கிகள் மீது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஏற்கனவே வருமானம் இன்றி வறுமையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, கடன் தொகையுடன் வட்டியை வசூலித்து மேலும் பல கஷ்டங்களை வங்கிகள் செய்யாத வண்ணம் தடுக்க வேண்டும். மீறி வசூலித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.