மதுரைக்கு நல்ல யோகமடா… எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்த அதிரடி திட்டங்கள்.

நீண்ட நாட்களாகவே தண்ணீர் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் மதுரை மாநகருக்கு, நிரந்தர தீர்வு தரும் வகையில், சுமார் ரூபாய் 1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கிடைக்க கூடிய திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.


அதன்பிறகு முதல்வர் பேசுகையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையே இல்லையென்கிற நிலையை உருவாக்குகின்ற அளவுக்கு அம்மாவின் அரசு திகழும். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் வழங்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு, ரூபாய் 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இதுவரை 7 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் மற்றும் இரு கரையோரப் பகுதிகளில் தலா சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், நான்கு வழிச்சாலை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சுமார் ரூபாய் 303 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் இரு கரையோரப் பகுதிகளில் தலா 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டி, நான்கு வழி பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி நிதியின் கீழ், சுமார் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரூபாய் 23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலைப் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இவை தவிர, பல்வேறு பாலங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வசதிகளும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.