காலையில் நிற்பார்! மதியம் அமர்வார்! அதிசயிக்க வைக்கும் விநாயகர்! எங்கு உள்ளார் தெரியுமா?

காலையில் நின்ற கோலத்திலும் மதியத்துக்கு பிறகு அமர்ந்த வடிவிலும் வித்தியாசமாகக் காட்சி தரும் விநாயகர் கும்பாசி என்ற ஊரிலுள்ள ஆனேகுட்டே என்ற இடத்தில் இருக்கிறார்.


கர்நாடகாவிலுள்ள கும்பாசியில், ஆனேகுட்டே என்ற ஊரில் 12 அடி உயர பிரம்மாண்டமான ஆனைமுகனை வித்தியாசமான அலங்காரத்தில் காணலாம். ஆனே என்றால் யானை; குட்டி என்றால் குன்று என்று பொருள். எனவே இதற்கு ஆனேகுட்டே என்ற திருநாமம் ஏற்பட்டது.

காலை வேளையில் அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்கும் சேவைகள் அர்ச்சனைகள் மற்றும் பூஜைகளை நின்றபடி ஏற்றுக்கொண்டு மதியம் மகா பூஜைக்குப் பின் அமர்ந்தபடி பக்தர்களை ஆசீர்வதிக்கிறார், மூலவரான முழுமுதற்கடவுள். வியக்க வைக்கும் வித்தியாசமான வடிவை தரிசிக்க வைக்கும் வகையில் அந்த மாதிரி இவரை அலங்கரிக்கிறார்கள்.

கும்பாசி என்ற புண்ணிய க்ஷேத்ரத்தில் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு அங்கு எழுந்தருளியுள்ள மகாலிங்கேஸ்வரரை தரிசித்து விட்டு வருவது ஒரு பக்தரின் தினசரி வழக்கம். ஒருநாள் அவரது கனவில் சிறுவன் ஒருவன் தோன்றி தான் மிகவும் பசியுடன் இருப்பதாக கூறி அழைத்துச் சென்று அங்கு ஒரு உயரமான கல் அருகில் சென்றதும் மறைந்துவிட்டான்.

மறுநாள் அந்த கல் அருகில் சென்றார் பக்தர். பலமுறை பார்த்த கல் என்றாலும் அன்று அவர் கண்களுக்கு அது கணபதியின் சிலையாகவும் அருகே இருந்த மரத்திலிருந்து அதன் மேல் விழுந்த பூக்கள் ஆனைமுகனை ஆராதனை செய்வது போலவும் இருந்தது. பக்கத்திலிருந்த மகாலிங்கேஸ்வரர் கோவில் புனித கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து மலர்களால் அர்ச்சித்து விட்டு சென்றுவிட்டார்.

சில நாட்கள் கழித்து அங்கு வந்து பார்த்த பொழுது பசு ஒன்று அந்தக் கல்லின் மீது பால் பொழிந்து கொண்டிருப்பதை கண்டார். ஆனைமுகனே அதில் எழுந்தருளியிருக்கிறார் என்ற அதன் மகத்துவத்தை அறிந்து தினமும் அங்கு வந்து பூஜைகள் செய்து வந்தார். தானே தோன்றிய முதற்கடவுளுக்கு அவர் பூசனைகள் புரிவதைத் தெரிந்து கொண்ட கும்பாசிவாசிகள் அவர் அருகிலேயே தங்கிட இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுத்தனர். பலரும் அங்கே வந்து வழிபட்டுப் பலன் கிட்டவே அந்தக் கல் இருந்த இடத்திலேயே சிறிய அளவில் கணபதி கோவில் கட்டினர்.

காலையில் நின்ற நிலையில் தரிசனம் தருவது போன்று வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. பகல் 11 மணிக்கு அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் தொடர்ந்து மந்திரங்கள் முழங்க மதிய பூஜை நடைபெறுகிறது. பின்னர் ஓம் என்ற மந்திர ரூபமாக பூக்கள் அலங்காரம் செய்யப்படுகிறது. ஏனெனில், இத்தல விநாயகர் ஓம்கார மூர்த்தியாக பிரணவ ஸ்வரூபமாக வணங்கப்படுகிறார். பின்னர் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கும்படி வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் அதிகாலை வரை காட்சி தருகிறார்.

ஏகாதசி தவிர தினமும் கணபதி ஹோமமும் அன்னதானமும் நடைபெறுகிறது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், சங்கடஹர சதுர்த்தி தினங்கள் இங்கே விசேஷம். கணபதி சதுர்த்தி அன்று ரதோத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. பரசுராம க்ஷேத்ரத்தின் ஏழு முக்தி தலங்களுள் இதுவும் ஒன்று.