காங்., கூட்டணிக்கு எதிர்ப்பு! தி.மு.க.வில் மனக்கசப்பு! ஆ.ராசா புதுக்கட்சி?

தன்னை சிறையில் சிக்கவைத்து கொடுமைப்படுத்தி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டாம் என்று ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார் ஆ.ராசா. ஆனால், அவர் கேட்கவில்லை என்பதால் புதிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்


இந்தியாவை மட்டுமின்றி, இந்த உலகத்தையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்டது. 1.76 லட்சம் கோடி அலைக்கற்றை மோசடி. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஆ.ராசா. காங்கிரஸ் மந்திரிசபையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2 ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் 1.76 லட்சம் கோடி முறைகேடு என்று தணீக்கை அதிகாரி குற்றம் சாட்டி, இந்தியாவையே அலற வைத்தனர் எங்கெங்கும் இந்த ஊழல்தான் பரபரப்பாக பேசப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டதுமே ஆ.ராசா பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். அத்துடன் ஆ.ராசா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் இந்த ஊழல் பணம் முறைகேடாக கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு கனிமொழி, சரத்குமார் ஆகியோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை படு தீவிரமாக நடைபெற்றது. இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தன.

மிகவும் கடுமையான குற்ற்ச்சாட்டு கூறப்பட்டாலும், ஊழல் நடந்ததற்கான போதிய ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லை என்று சி.பி.ஐ. கை விரித்தது. அதனால் இந்த வழக்கு ஒட்டுமொத்தமாக யூகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்தது. இதன் காரணமாக ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டது போன்று, ஏலம் விடுவதற்கு அனுமதியளித்த பிரதமர் மன்மோகன் சிங்கும் கைது செய்யப்பட வேண்டும். அவர் கைது செய்யப்படவில்லை என்றால் என்னையும் கைது செய்யக்கூடாது என்று வாதாடினார் ஆ.ராசா. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்காக தன்னை காங்கிரஸ் பலி கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். அதனால் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது.

இந்த நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதை ஆ.ராசா முழுமையாக வெறுத்தார். நம்மை அவமானப்படுத்திய கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டாம். 2019ம் ஆண்டும் பா.ஜ.க.தான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதால், அதனுடன் கூட்டணி வைக்கலாம் என்று எவ்வளவோ எடுத்துச்சொன்னார். ஆனால், ஸ்டாலின் கேட்கவே இல்லை. ராகுல்காந்தி பிரதமராக தி.மு.க. அனைத்து முயற்சிகளும் எடுக்கும் என்று தெரிவித்து விட்டார். 

தன்னை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வேண்டுமா என்பதுதான், இப்போது ராசா முன்பு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. தனக்கு கனிமொழி ஆதரவு தருவார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவரும் பழைய சம்பவங்களை மறந்துவிட்டு சோனியா, ராகுல் பின்னே போய்விட்டார். ஆனால், ஆ.ராசாவால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் தி.மு.க.வில்  மனக்கசப்புடன் இப்போது இருக்கிறார்  என்று தெரிவிக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் தெரிந்த சரியான தலைவர் இல்லை என்பதால், அப்படி ஒரு தலைவனாக மாற வேண்டும் என்ற ஆசை  ஆ.ராசாவுக்கு உண்டு. அதற்கான  அண்டர்கிரவுண்ட் வேலையில் ஆ.ராசா ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. அடுத்த சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு  முன்னர் கட்சியைத் தொடங்குமாறு, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

அதனால் இந்த முறை காங்கிரஸ் ஆதரவுடன் எம்.பி.தேர்தலில் நிற்கத்தான் வேண்டுமா என்று யோசிக்கிறார். தன்னுடைய தொகுதியில் ஜெயித்து, அதன்பிறகு தி.மு.க.வில் இருந்து வெளியேறுவதா அல்லது தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கும் முன்னரே வெளியேறிவிடலாமா என்பதுதான் ஆ.ராசாவின் யோசனை. ஆ.ராசா அவசரப்பட மாட்டார் என்றாலும் மனதில் ஆயிரத்தெட்டு கசப்புகளுடன் இருக்கிறார் என்பது மட்டும் நிஜம்.