ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு கட்டு கட்டாக பணம்! வைரல் கனிமொழி வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு கட்டு கட்டாக கனிமொழி பணம் கொடுக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.


தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி இரைக்கும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வின் தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழியும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்னும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை எம்.எல்.ஏ இன்று நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். 

திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது குற்றமாகும் எனவும் இது விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட கனிமொழியின் நாடாளுமன்ற வேட்புமனுவை நிராகரிக்க அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்ன என்றால் அந்த வீடியோ முன்னர் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இதனை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதும் அப்படியா என்று கேட்டு திருதிருவென விழித்துவிட்டு இன்பதுரை அந்த இடத்தை காலி செய்தார்.