மனித வெடிகுண்டு மிரட்டல்... கலவரத்தைத் தூண்டுகிறார் டிடிவி.தினகரன்.! சசிகலா மீது அ.தி.மு.க. மீண்டும் காவல்துறையிடம் புகார்..!

சமீபத்தில் கொரோனா தொற்றுக்காக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, அதன்பிறகு தனியார் ரிசார்ட்டுக்குப் போன நேரத்தில்ஆவரது காரில் அ.தி.மு.க. கொடியைக் கட்டியிருந்தார்.


இந்த நிகழ்வுக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அ.தி.மு.க. கொடியைக் கட்டுவது சட்டத்துக்கு எதிரான செயல் என்று காவல் துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் 8ம் தேதி சசிகலா சென்னைக்கு வர இருக்கும் நிலையில், ஏராளமான இடங்களில் வரவேற்பு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக்கூடாது, சசிகலாவும் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்று அ.தி.மு.க. மீண்டும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அந்த வகையில் இன்று தமிழக போலீஸ் டிஜிபியை தமிழகத்தின் மூத்த நிர்வாகி மதுசூதனன், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அ.தி.மு.க. கொடிக்கு அவமானம் தேடித்தர அனுமதிக்கக்கூடாது என்றும் போலீஸ் அனுமதி இன்றி பேரணி நடத்தவும் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அனுமதி மறுக்கப்பட்டால் நாங்கள் மனித வெடிகுண்டாக மாறுவோம் என்று டிடிவி.தினகரன் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை மீறி தினகரன் செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.