8000 வாக்குகளுக்கு ரூ.125 கோடி செலவு! கதிர் ஆனந்த் வெற்றி குறித்து பகீர் கிளப்பும் ஜெயக்குமார்!

125 கோடி ரூபாய் கொடுத்து 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது! எங்களை பொறுத்தவரை வேலூர் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெற்றுள்ளோம். திமுகவின் இந்த வெற்றி மோசமான வெற்றி என்றும்,மோசடியான வெற்றி என்றும் சொல்லலாம். கடந்த தேர்தலில் அப்பாவி மக்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி விட்டு வெற்றி பெற்றது திமுக.

திமுகவின் பொய் இந்த தேர்தலில் அது எடுபடவில்லை. திமுக பணநாயகத்தை நம்பி இந்த தேர்தலில் போட்டியிட்டது. அதனால் தான் திமுக வேட்பாளர் வென்றுள்ளார்.  இந்த நிலைமையை பார்க்கும் போது 2021 தேர்தலில் திமுக தேராது என்று தெரிகிறது. 125கோடி ரூபாய் செலவு செய்து 8000ஆயிரம் வாக்குகள் கூடுதலாக  பெற்றது  ஒரு வெற்றியா? 

அதிமுகவை பொறுத்தவரை மக்கள் மனதில் வென்றுள்ளது. திமுக ஒரு தேய்பிறையாக தான் போய் கொண்டு இருக்கிறது. அது தான் இந்த தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. அதிமுக வளர்பிறையாக இருக்கிறது. முடிவுகளை பார்த்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். 2021ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெருவதற்கான அறிகுறி தான் இந்த வேலூர் தேர்தல்.

பழம் நழுவி பாலில் விழும் என்று  வேலூர் தேர்தல் வெற்றியை பற்றி நினைத்தோம் ஆனால் பழம் நழுவி சற்று தவறி கீழே விழுந்து விட்டது. ஆனாலும் அடுத்தமுறை நிச்சயம் பாலில் விழும். நீங்களே பாருங்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.