கேரளாவின் இடுக்கியை கலக்கும் அதிமுக பெண் பிரமுகர்! பஞ்சாயத்து போர்டு தேர்தலில் வெற்றிக் கொடி!

திருவனந்தபுரம்: அதிமுக உறுப்பினர் ஒருவர் கேரளாவில் பஞ்சாயத்து தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீருமேடு கிராம பஞ்சாயத்து தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  சேர்ந்த ரஜனி வினோத் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் மீது பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து, ரஜனி வினோத் பதவி விலகினார். அவருக்கு அடுத்தப்படியாக, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிமுக உறுப்பினர் எஸ்.பிரவீணா தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் எப்படி அந்த பதவிக்கு வந்தார் என்பதுதான் சுவாரசியமான கதையாகும். 

ஆம். அதிமுக மிகச் சிறுபான்மை கட்சியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக, பீருமேடு கிராமத்தில் தமிழர்கள்தான் அதிகம். அந்த ஊரின் பஞ்சாயத்து சபையில் மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 2 பேரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துவிட்டது. எஞ்சிய உறுப்பினர்கள் மொத்தம் 15 பேர்தான். இதில், இடதுசாரிகள் கூட்டணி சார்பானவர்கள் 7 பேர்.

இதேபோல, காங்கிரஸ் கூட்டணி சார்பானவர்கள் 7 பேர். அதிமுக சார்பாக ஒரே ஒருவர் தனித்து நிற்கிறார். அதேசமயம், தலைவர் பதவிக்கு வர வேண்டிய நபர் கண்டிப்பாக, எஸ்சி (பட்டியலினம்) சமூகத்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு உள்ளது.  

இப்படி திரிசங்கு நிலையில் யார்தான் மெஜாரிட்டி என நிரூபிக்க முடியாமல் அனைவரும் திண்டாட, இந்த சூழ்நிலையை பிரவீணா தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார். அவர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கூட்டணி (யூடிஎஃப்) அவரையே தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து, கேரளாவில் முதல்முறையாக அதிமுக சார்பாக பஞ்சாயத்து தலைவராகும் பெருமையை பிரவீணா பெற்றுள்ளார். அத்துடன், அவர்தான் அதிமுக.,விற்கு கேரளாவில் கிடைத்துள்ள முதல் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். என்னதான் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் அண்டை மாநிலங்களில் அதிமுக ஒரு சிறுபான்மை கட்சிதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.