கூட்டணிக்கு நாளை வரை தான் கெடு! பிரேமலதாவுக்கு அதிமுக அனுப்பிய கடைசி சேதி!

யாராவது அ.தி.மு.க.வை பற்றி தவறாகப் பேசினால் பாய்ந்துபாய்ந்து கடித்துக் குதுறுவார் ஜெயக்குமார். ஆனால், இன்று சாதுவாக அதேநேரம் காட்டமாக பிரேமலதாவுக்கு பதில் கூறியிருக்கிறார்.


தேவையில்லாத வார்த்தைகளைப் பேசக்கூடாது, 37 எம்.பி.க்களை வைத்து என்னவெல்லாம் சாதித்திருக்கிறோம் என்று சமாளிபிகேஷன் செய்தவர், நாளை மாலைக்குள் அனைத்தும் முடிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார். இதையேதான், அமைச்சர் தங்கமணியும் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா வெற்றிக்குக் காரணம் கேப்டன் என்று பிரேமலதா கூறிய பிறகு அ.தி.மு.க.வின் சீட் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். மேலும் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பு அறிக்கை விடவேண்டும் என்று அ.தி.மு.க.வில் இருந்து கூறப்பட்டுள்ளது.

இதுதவிர ஏற்கெனவே 4 + 1 என்று பேசப்பட்டு இருந்தது. இப்போது ராஜ்யசபா சீட் தருவது உறுதி கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கு மட்டும் கூட்டணிக்கு வருவதாக இருந்தால் நாளை மாலைக்குள் கையெழுத்துப் போடவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தே.மு.தி.க.வை சேர்க்கவே வேண்டாம் என்று ராமதாஸ் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தேர்தலுக்கே இத்தனை அலும்பு செய்பவர்கள், தேர்தல் முடிந்ததும் கடுமையாக சண்டைக்கு வருவார்கள். அதனால் தே.மு.தி.க.வை வெளியே அனுப்பிவிட்டு, அந்த சீட்டை பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அ.தி.மு.க. இன்னமும் காத்திருக்கவே விரும்புகிறது. இடைத் தேர்தலில் ஆயிரம் ஓட்டுக்கள் கூட வெற்றி தோல்வியைத் தீர்மானித்துவிடும் என்பதால், இழுக்கும்வரை இழுப்போம் என்று காத்திருக்கிறது.

மரியாதை, மானத்தை இழந்து அ.தி.மு.க.வுடன் பிரேமலதா கூட்டணி வைப்பாரா அல்லது தனியே நின்று மானம், மரியாதையை இழப்பாரா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.