எடப்பாடியுடன் அமித் ஷா தொலைபேசி பேச்சு – கூட்டணி முடிஞ்சாச்சு – யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல்நாட்டு விழாவின்போதே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.வில் இருந்த குழப்பம் காரணமாக தள்ளிப்போன விவகாரம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.


எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா முடிவடைந்து மதுரை விமான நிலையத்தில் மோடியுடன் சில நிமிடங்கள் பேசி கூட்டணியை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி ஆசைப்பட்டார். ஆனால், முன்கூட்டியே சரண்டர் ஆகவில்லை என்ற கோபத்தில் இருந்த மோடி, எது பேசுவதானாலும் அமித் ஷாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

அதனால் உடனடியாக அமித் ஷாவை தொடர்புகொண்டார் எடப்பாடி. ஆனால், அவரும் கொஞ்சம் பிகு செய்து, அதன்பிறகு இருவரும் தொலைபேசியில் பேசி கூட்டணி குறித்து முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவு குறித்து முன்கூட்டியே அனைத்து அமைச்சர்களிடமும் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார் எடப்பாடி.

கே.பி.முனுசாமி, தம்பிதுரை, பொன்னையன், மனோஜ் பாண்டியன் போன்ற ஒருசிலரிடம் மட்டும் எடப்பாடி ஆலோசனை நடத்தவில்லை. ஆனால், அனைவரிடமும் தகவலை பாஸ் செய்துவிட்டார். தனியே தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிறகு மோடி வந்தாலும் சிக்கல், ராகுல் வந்தாலும் சிக்கல். அதனால் நாம் நாடாளுமன்றத் தேர்தலை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பேசி சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அதன்படி இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க.விற்கு 6 தொகுதிகளும் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும் முடிவாகியிருக்கிறது. இதுதவிர கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், பாரிவேந்தர் ஆகியவர்களுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. இந்த சூழலில் எப்படியேனும் 20 தொகுதியில் அ.தி.மு.க. நிற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதனால் மூன்று பேரையும் இரட்டை இலையில் நிற்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிப்ரவரி 10ம் தேதி மோடி தமிழகம் வரும்போது, கூட்டணி அறிவிப்பு முறைப்படி இருக்கும் என்று தெரிகிறது. அதற்குள் அனைத்து விவகாரங்களும் முழுமையாக முடிக்கப்பட்டு, பா.ஜ.க. வேட்பாளர்களை மோடி மேடையில் அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.