அ.தி.மு.கவில் மீண்டும் வெடித்தது மோதல்! போர்க்கொடி தூக்கினார் மைத்ரேயன்!

அ.தி.மு.கவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழு விவகாரத்தை முன் வைத்து அக்கட்சியின் எம்.பி., மைத்ரேயன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.


அண்மையில் அ.தி.மு.க சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கிடு குழு அமைக்கப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் சரிசமமாக சேர்க்கப்பட்டனர். ஆனால் ஓ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளரான மைத்ரேயன் எந்த குழுவிலும் சேர்க்கப்படவில்லை.

   இதனால் தனது ஆதங்கத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் மைத்ரேயன் சூடான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மைத்ரேயன் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது.

   மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை. கழகத்தில் நான் 1999 ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள்.

   2009 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன். 2009 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி " வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம் - An Agenda For A Better India " என்ற தலைப்பில் அந்த தேர்தல் அறிக்கை தயாரானது.

   அம்மா அவர்கள் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார். அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்மா அவர்கள் திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

   தேர்தல் அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம் Power point presentation ஆக விளக்க வேண்டும். ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர் திரு.சுனில் செய்யலாம் என்று அம்மா அவர்களிடம் கூறியபோது, " இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும் "என்று அம்மா உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது.

   நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். நான் அறிந்த வரை ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point presentation செய்தது அதுதான் முதல் தடவை. அடுத்த நாள் காலை அம்மா அவர்கள் கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று அம்மா அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்கள்.

   நானும் தான். புன்னகையோடு அம்மா அவர்களும் ஏற்றுக்கொண்ட பிறகு அம்மாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார்.  " மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் " என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார்கள். இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும்.

   இவ்வாறு அந்த பதிவில் மைத்ரேயன் கூறியுள்ளார். அதாவது இந்த அறிக்கை மூலம் ஜெயலலிதாவால் பாராட்டப்பட்ட தன்னை தற்போதைய அ.தி.மு.க நிர்வாகிகள் ஒதுக்கியுள்ளனர் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். மேலும் தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தன்னை பேச்சுவார்த்தை குழுவில் சேர்க்குமாறு அவர் கோரவில்லை என்றாலும் பதிவின் நோக்கம் அதுவாகத்தான் தெரிகிறது.

   எனவே விரைவில் மைத்ரேயன் பேச்சுவார்த்தை குழுவில் சேர்க்கப்படுவார் இல்லை என்றால் மீண்டும் அ.தி.மு.கவில் பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெரிகிறது.