ரேசன் அரிசியை திருடி கொரோனா நிவாரணம் வழங்கிய அதிமுகவினர்..? இது நெல்லை ஸ்டைல்..!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் ரேஷன் கடையில் விற்கப்படும் அரிசியை கடத்தி சொந்த செலவில் நிவாரணம் வழங்குவது போன்று அதிமுகவினர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு. இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியரை இன்று சந்தித்து அனல்பறக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதாவது திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் இயங்கி வரும் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் அரிசியை அதிமுகவினர் தவறாக பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். அந்த மாவட்டத்திற்குட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களில் இயங்கிவரும் கூட்டுறவு அமைப்பில் இந்த தவறு நடைபெற்று வருவதாக புகாரளித்துள்ளார்‌.

வள்ளியூர் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சங்கத்தின் கீழ் 183 நியாயவிலை கடைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசியை அதிகமாக வழங்க வேண்டுமென்று மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

நியாயவிலை கடைகளிலிருந்து அரிசி கடத்தப்பட்டு தனியார் ஆலை ஒன்றுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கிருந்து பட்டை தீட்டப்பட்டு அவர்களுடைய சொந்த பணத்தில் நிவாரணம் வழங்குவது போன்று செயல்பட்டு வருகின்றனர். இது சட்டத்திற்கு புறம்பானது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட உணவு தடுப்பு பிரிவினர் 420 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மற்றும் முருகேசன் ஆகியோரை கைது செய்வதற்கு பதிலாக, வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் சம்பந்தமில்லாத அவரை கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இன்பதுரை மற்றும் முருகேசனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னாள் உறுப்பினர் அப்பாவு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரானது அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.