டெல்லியில் 2 அமைச்சர்கள்! எடப்பாடி -பொன்னார் சந்திப்பு! உருவாகிறது அதிமுக – பா.ஜ.க கூட்டணி!

அ.தி.மு.க – பா.ஜ.க இடையிலான கூட்டணி உருவாவது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.


   நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பா.ஜ.க மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பீகாரில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி என்கிற முடிவில் பா.ஜ.க உள்ளது. எனவே அங்கு கூட்டணிக்கான வேலைகளை முடித்து தொகுதிப் பங்கீட்டையும் அமித் ஷா இறுதி செய்துவிட்டார். இது தவிர மராட்டிய மாநிலத்தில சிவசேனாவுடன் திரை மறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

   இதே போல் தமிழகத்திலும் பா.ஜ.க கூட்டணிக்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அ.தி.மு.கவிற்கு தமிழகத்தில் 4 வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது. இல்லை என்றால் ரஜினியை வழிக்கு கொண்டு வந்து அவருடன் கூட்டணி ஏற்படுத்தி தேர்தலை எதிர்கொள்வது. 3வதாக இருக்கும் வழி அ.தி.மு.க – ரஜினி ஆகியோரை ஒரே அணியில் இணைத்து பா.ஜ.க களம் இறங்குவது.

   இந்த மூன்றுக்கும் வழியில்லை என்றால் தமிழகத்தில் தனித்து போட்டியிடுவதை தவிர பா.ஜ.கவிற்கு வேறு வழியில்லை. ஆனால் பா.ஜ.க முதல் சாய்சாக தேர்வு செய்துள்ளது அதிமுகவைத் தான். அதிமுகவிற்கு என்று இருக்கும் வாக்கு வங்கி மற்றும் பணத்தை செலவழித்தால் தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெறலாம் என்பது தான் பா.ஜ.கவின் கணக்கு. இதற்காகவே கடந்த சில மாதங்களாக அ.தி.மு.கவிற்கு தொடர்ந்துமத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.

   இந்த நிலையில் ஜனவரி இறுதியில் மோடி தமிழகம் வர உள்ளார். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இது குறித்து பேசவே எடப்பாடி பழனிசாமியின் வலது மற்றும் இடது கரங்களாக கருதப்படும் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் தமிழக பா.ஜ.கவின் பொறுப்பாளர் போல் செயல்படும் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர்.

   இதே நேரத்தில் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். ஒரே நேரத்தில் டெல்லியிலும் சென்னையிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க 15 தொகுதிகளை கேட்பதாகவும் அதற்கு அ.தி.மு.க தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

   பா.ஜ.கவிற்கு பத்து தொகுதிகள் என்றால் ஓ.கே என்கிற நிலைப்பாட்டுக்கு அ.தி.முக. வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து ஜனவரி இறுதியில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மோடி சென்னை வரும் போது முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓபி.எஸ்சும் அவரை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது.