பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி! வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகிறது!

பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள தகவலை வரும் வெள்ளியன்று வெளியிட அ.தி.மு.க முடிவெடுத்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதமே வாக்குப் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பா.ஜ.க தமிழகத்தில் தனது கூட்டணியை இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

இதே அ.தி.மு.கவும் கூட தி.மு.கவிற்கு எதிராக பிரமாண்ட கூட்டணிக்கான வேலைகளை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க ஏறக்குறைய கூட்டணிக்கு உறுதி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு இழுபறியால் தே.மு.தி.க அ.தி.மு.கவுடன் இணைவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் வரும் 8ந் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தான் கூட்டணி குறித்த தகவலை ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.

அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – பா.ம.க – தே.மு.தி.கவுடன் இணைந்து போட்டி என்கிற தகவலை மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்க உள்ளனர். மேலும் 25 தொகுதிகள் அ.தி.மு.கவிற்கு என்றும் எஞ்சிய தொகுதிகள் கூட்டணி கட்சிக்கும் என்றும் தெரிவிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு கூட்டணி குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டாலும் பொதுவெளியில் அறிவிக்க மேலும் ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள். அதுவும் பிரதமர் மோடி திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி வர உள்ளார். அவரது தமிழக வருகையின் போது ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இணைந்து மோடியுடனான கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்கிறார்கள்.

அந்த வகையில் இன்னும் பத்து நாட்களில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்கள் சிலர் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்க்கு தகவல்களை தட்டி விட்டு வருவதாக கூறப்படுகிறது.