இளம் பெண்ணின் கண்ணீரை பாரத்து உயிரை விட்ட போலீஸ்காரர்! உருக வைக்கும் சம்பவம்!

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் போது கண்ணீர் விட்டு கதறிய இளம் பெண்ணுக்கு உதவ முடியாத வேதனையில் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கேட்போரை உருக வைத்துள்ளது.


அரியலூர் மாவட்டம் வானதிரையன் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவர் திருச்சி சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இயல்பிலேயே இளகிய மனம் மற்றும் அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர் முத்து என்று கூறப்படுகிறது.

 

சக காவலர்களுக்கு மட்டும் அல்லாமல் உதவி என்று யார் கேட்டாலும் செய்யும் பழக்கம் முத்துவுக்கு இருந்துள்ளது. இதனால் திருச்சி சிறப்பு காவல் படையில் முத்துவை தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம்.

 

இதே போல் சொந்த கிராமத்திலும் கூட முத்து மீது அப்பகுதி மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி திருச்சி காவலர் குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துவின் சடலம் மீட்கப்பட்டது.

 

காவலர்களை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்த இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் முத்து எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் எழுதி வைத்திருந்தது கேட்போரை கலங்க வைப்பதாக இருந்தது.

 

கடந்த ஒன்றாம் தேதி ஸ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் இடித்துள்ளனர். இதற்கான பாதுகாப்பு பணியில் முத்துவும் உடன் சென்றுள்ளார். அப்போது தாய் தந்தையை இழந்து தனியாக வசித்து வரும் இளம் பெண் ஒருவரின் வீடும் இடிக்கப்பட்டது.

 

அந்த வீட்டை இடிக்கும் போது அந்த இளம் பெண் கதறி அழுதுள்ளார். மேலும் முத்துவிடம் வந்துதனக்கு உதவுமாறு கதறியபடியே அந்த இளம் பெண் முறையிட்டுள்ளார். ஆனால் தன்னால் அந்த பெண்ணுக்கு உதவ முடியவில்லை என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

 

அந்த பெண்ணின் அழுகையை பார்த்தது முதல் உலகில் வாழ பிடிக்கவில்லை என்றும் எனவே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் முத்து அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

போலீசார் என்றாலே முரட்டுத்தனமானவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் என்று கூறப்படும் நிலையில் யாரென்றே தெரியாத ஒரு இளம் பெண்ணின் அழுகையை தாங்க முடியாமல் முத்து உயிரை மாய்த்துக் கொண்டது பலரையும் அதிர வைத்துள்ளது.