இரவில் மட்டும் திறந்திருக்கும் அதிசய ஆன்மீகக் கோயில் – கெட்ட நேரத்தை நல்ல நேரமாக்கும் தேவி

நம் கெட்ட நேரத்தை மாற்றக்கூடிய சக்தி நிறைந்த, 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் தெரியும்


12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் 'காலதேவி அம்மன்' கோயில் எப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்தது, இந்த கோயிலில் எப்படி வணங்குவது, நல்ல நேரமெப்படி பெறுவது என்ற விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம்... காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பது முன்னோர்களின் மொழி. நேரத்திற்கு மதிப்பு கொடுப்பதும், அதன் மதிப்பையும் , பெருமையையும் உணர்ந்து, வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தையும் அதில் நல்லது, கெட்டது என காலக்கணக்கை வைத்து, விஞ்ஞானம் முளைக்கும் முன்னரே காலம் குறித்து வழிகாட்டி உள்ளனர். ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது. கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில், தெய்வம் : காலதேவி

கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என எழுதப்பட்டிருக்கும் அதாவது நேரம் தான் உலகம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. புராணங்களில் வரக்கூடிய காலராத்திரியை தான், இந்த கோயிலில் காலதேவியாக வழிபட்டு வருகின்றனர். இந்த கால தேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. பஞ்சபூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், காத்தல், அழித்தல், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய சக்தியாக விளங்குபவர் காலதேவி.

நேரத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய கால தேவிக்கு ஒருவரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. இது தான் இந்த கோயிலின் மிகப்பெரிய சக்தியாகவும், தத்துவமாகவும் விளங்குகிறது. மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்று தான் இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கேற்றியபின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் நின்று காலதேவிக்கு நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும்.

உங்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும் என்பது தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதைகோடு என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும்.

அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும். இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.