கொரோனாவால் சாலையில் இறந்து கிடந்த முதியவர்? 4 மணி நேரமாக சடலத்தை எடுக்க ஆள் இல்லை! சென்னை பகீர்!

சென்னையில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாலையோரத்தில் முதியவர் இறந்துவிட்ட நிலையில் கொரோனாவுக்கு பயந்து யாருமே கண்டுகொள்ளாமல் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


முன்பெல்லாம் ஒருவர் விபத்தில் சிக்கினாலோ, மயங்கி விழுந்தாலோ, உயிரிழந்துவிட்டாலோ பொதுமக்கள் ஓடோடி வந்து தங்களால் முடிந்த உதவியை செய்வர். ஆனால் தற்போது கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக மனிதநேயம் மனதில் இருந்தாலும் அதை வெளிப்படுத்த மனமின்றி அப்படியே கடந்து செல்லும் சோகம் நடைபெறுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரேயே உள்ளது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. இங்குள்ள சாலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிட்டத்தட்ட 4 மணிநேரமாக கேட்பாரற்று கிடந்தது. மருத்துவமனை சாலையோரத்தில் சடலம் இருந்ததால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என கருதி பொது மக்கள் அருகில் செல்ல முயற்சி செய்யவில்லை. பின்னர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் போனதால் அவரது உடலை மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றனர். அவர் யார் எங்கிருந்து வந்தார், எப்படி இறந்தார் என்ற எந்த விவரங்களும் தற்போது தெரியவில்லை. அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, போலீசார் விசாரணைக்கு பின்னரே பல தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.