இழுத்து மூடப்பட்ட கோவில்..! புதுப்பெண்ணுக்கு நடுரோட்டில் வைத்து தாலி கட்டிய புதுமாப்பிள்ளை..! எங்கு தெரியுமா?

நாடெங்கும் சுயஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் சாலையில் பொதுமக்கள் மத்தியில் திருமணம் நடைபெற்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரனா. நாளுக்கு நாள் கொரனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நோயை குணப்படுத்த தற்போது வரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் எப்படியாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சமூக ரீதியான கொரனா பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 22ம் தேதியன்று சுயஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதை கடைப்பிடிக்கும் விதமாக இந்தியா முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. மாலை 5 மணியளவில் கொரனாவை எதிர்த்து பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்காக கைதட்டி நன்றியை பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சுயஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கோயில்கள் கூட திறக்கப்படவில்லை. இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற இருந்த நிலையில் அவை தள்ளி வைக்கப்பட்டன. சில திருமணங்கள் சில கோயில்களில் குறைந்த அளவு எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களுடன் நடைபெற்றது. சிலர் அதிகாலையிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடலூரில் கோவில்கள் மூடப்பட்டதால் ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு வெளியே சாலையில் வைத்து தங்களது இல்ல திருமணத்தை நடத்தி முடித்தனர். இன்னும் சொல்லப் போனால் இந்த திருமணத்திற்கு புரோகிதர் கூட இல்லை. அப்படி நடைபெற்ற திருமணத்தின் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.