கோவையில் 25 ரூபாய்க்கு இளைஞரை கொலை செய்த நண்பன்! ஏன் தெரியுமா?

கோவையில் வெறும் 25 ரூபாய்க்கு நண்பனை கொலை செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் லேத் பட்டறை தொழிலாளியாக இருந்தார். கடந்த 6ந் தேதி முனியப்பன் கோவில் அருகே இவரை தலையில் கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்திருந்தனர். சடலத்தை கைப்பற்றி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். பலரிடம் விசாரித்தும் கொலை குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை.

   இந்த நிலையில் ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு கொலை சம்பவே சிசிடிவியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார், ஆனந்த் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் நபரை அடையாளம் காணும் பணியை தீவிரப்படுத்தினர்.

   ஆனந்த் உறவினர்களிடம் வீடியோவை காட்டி அவர் தலையில் கல்லை போடும் இளைஞர் அடையாளம் தெரிகிறதா என்று விசாரித்தனர். அப்போது ஆனந்த் மனைவி தனது கணவர் தலையில் கல்லை போடுவது அவரது நண்பர் அருண் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரை போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். விசாரணையில் கடந்த 28ந் தேதி தானும் ஆனந்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

   அப்போது மது அருந்த தனக்கு பணம் தேவைப்பட்டதாகவும், 25 ரூபாய் குறைகிறது நாளைக்கு தருகிறேன் என்று கூறி பணம் கேட்டதாகவும் அருண் கூறியுள்ளார். அதற்கு பணம் தர முடியாது என்று ஆனந்த் கூறியதாகவும் ஆனால் ஆனந்திடம் பணம் இருந்ததாகவும் நண்பர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஆனந்தை அடித்து கீழே தள்ளி 25 ரூபாயை எடுத்துச் சென்று மது அருந்தியதாக நண்பர் அருண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

   இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வெறும் 25 ரூபாய்க்கு கொலை செய்த அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வெறும் 25 ரூபாய்க்கு தனது கணவர் உயிரிழந்ததை எண்ணி அவரது மனைவி சுமா கண்ணீர் விட்டு கதறினார்.