சிங்கப்பூரில் ஒரு கல்யாணம்! மன்னார்குடியில் ஒரு கல்யாணம்! 2 லட்டு சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி!

மலேசிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை ஏமாற்றிவிட்டு மற்றொரு திருமணம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிங்கப்பூரில் சில வருடங்கள் பணி புரிந்தார். அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்தவரான துர்கா தேவி என்ற பெண் சிங்கப்பூரில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

 

   இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்து பழகவே காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் அந்நாட்டு சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அண்மையில் தனியாக ராஜ்குமார் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவரது குடும்பத்தார் ராஜ்குமாருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். துர்கா தேவியின் நடத்தை சரியில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வேறு திருமணத்திற்கு மும்முரமாக ஏற்பாடுகளை செய்தனர்.

 

   கடந்த 20ஆம் தேதி அதே ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் ராஜ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையறிந்த துர்காதேவி உடனடியாக பெருகவாழ்ந்தான் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உள்ளூர் காவல் நிலைய போலீசார், என அனைவரிடமும் அவர் புகார் அளித்திருந்தார்.

 

   திருமணம் நடைபெற இருந்த மண்டபத்துக்கு போலீசாருடன் சென்று துர்கா தேவிக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராஜ்குமாருக்கு வேறொரு கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடைபெற்ற செய்தி கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தனக்கும் ராஜ்குமாருக்கும் சட்டபூர்வமாக திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் அவர் போலீசாரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

 

   இதை எடுத்து இளைஞர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். ரெண்டு லட்டு சாப்பிட நினைத்த இளைஞர் தற்போது சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்.