13 வயதில் கர்ப்பம்! 14 வயதில் குழந்தைக்கு தாய்! சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுமிக்கு, திருமணம் நடத்தி, பெண் குழந்தைக்கு அம்மாவாக்கிய கொடுமை பற்றி, சிறார் நல வாரியம் விசாரணை மேற்கொண்டுள்ளது.


மாறி வரும் சமூக சூழலுக்கு ஏற்ப, பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைவான வயதில், பெண்களை யாரும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது. 


அப்படி செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொதுவான சட்ட விதிமுறையாகும். இத்தகைய சூழலில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், சமீபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. 


இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஆனால், அந்த சிறுமியில் வயது 14 என தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை அதிகாரிகள், உடனடியாக, மாவட்ட சிறார் நல வாரியத்தில் புகார் அளித்தனர். 


இதன்பேரில், விரைந்து வந்த அதிகாரிகள், இதுபற்றி சம்பந்தப்பட்ட சிறுமியின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். 


கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக, வேலை தேடி, திருப்பூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர், காங்கேயத்தில் கூலிவேலைக்குச் சென்றுவந்த நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமி 8ம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள். 


இதையடுத்து, அவளை, ஊத்துக்குளியில் உள்ள உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளனர். தற்சமயம், அனைவருமே ஊத்துக்குளியில் ஒன்றாக வசித்தபடி, கூலி வேலை செய்துவருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


14 வயது சிறுமி ஒரு குழந்தையை எப்படி பராமரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பும் சிறார் நல வாரிய அதிகாரிகள், இதுபற்றி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். 


அதேசமயம், இத்தகைய சட்ட விதிமுறைகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று, சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.


Picture: Model