மணல் மாதா பூமிக்கடியில் இருந்து வெளியே வந்த அதிசயக் கதை தெரியுமா? தீய ஆவிகளிடம் இருந்தும் விடுதலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் சொக்கன் குடியிருப்பு என்று ஒரு ஊர் இருக்கிறது.


இன்றைய தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் தென் பகுதி அன்று "மானவீரநாடு" என்று அழைக்கப்பட்டது. மானவீர நாட்டை "கந்தப்பராசா" என்ற பாண்டிய இளவரசன் ஆண்டு வந்தான். இவரது மனைவி மற்றும் மகள் இருவரும் தீய ஆவியால் பாதிக்கப்பட்டு கடும் வேதனை அடைந்தார்கள். பல்வேறு பூசாரிகள் வந்து முயற்சி செய்தும் அவர்களை குணமாக்க முடியவில்லை. இந்நிலையில் இளவரசன் புனித தோமையார் கேரளாவில் செய்த அற்புதங்களைப் பற்றி கேள்விப்பட்டு தோமையாரைத் தனது இல்லத்துக்கு அழைத்து வர முடிவு செய்தான். எனவே புதிதாக ஒரு மாட்டு வண்டி செய்து தானே நேரில் சென்று புனித தோமையாரைக் கண்டு மானவீர நாட்டிற்கு அழைத்து வருகின்றான். இளவரசனின் வீட்டிற்கு வந்த புனித தோமையார் இறைவனை வேண்டி அவரது மனைவியையும் மகளையும் தீய ஆவியின் பிடியிலிருந்து குணமாக்கினார். இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்ட இளவரசனின் குடும்பமும் மக்களும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று, புனிதரின் திருக்கரத்தால் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

மானவீரநாட்டின் தென்கிழக்கெல்லை நகரமாக கணக்கன் குடியிருப்பு திகழ்ந்தது. கி.பி. 1325-ல் கணக்கன் குடியிருப்பு என்ற இவ்வூரில் வாழ்ந்த ஒரு பக்தர் கனவில் அன்னை மரியாள் தோன்றி ஆலயம் அமைக்க கேட்டுக் கொண்டார். பக்தரும் மக்கள் ஒத்துழைப்போடு அன்னைக்கு அழகிய சிறிய ஆலயம் அமைத்துத் தந்தார்.

கி.பி. 1597-ல் இப்பகுதியை அரசூர் மன்னன் துறவிப்பாண்டியன் ஆண்டு வந்தார். அவர் கணக்கன் குடியிருப்பில் வாழ்ந்து வந்த ஏழை விதவைப் பெண்ணை வீண்பழி சுமத்தி, கொலை செய்ய தீர்ப்பளித்தார். அபலையின் சாபம் அகிலத்தை அதிரவைத்தது. பெரும் சூறாவளி வீசியது. மண்மாரி பொழிந்தது. ஊரே அழிந்தது. அத்தோடு அன்னையின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. அவ்வழிவுக்குப்பின் அப்பகுதி கொடிய விலங்குகள் வாழும் வனாந்தரமாக மாறிப் போனது.

கி.பி. 1798-ல் இக்காட்டில் கால்நடைகள் மேய்த்து வந்த ஒருவன் காலில் தடுக்கிய சிலுவையைக் கண்டு சொக்கன் குடியிருப்புக்கு வந்து உரைத்தான். அக்காலம் சொக்கன் குடியிருப்பு வடக்கன்குளம் பங்கோடு இணைந்திருந்தது. பங்குதந்தை கிளமெண்ட் தொமாசினி தலைமையில் சொக்கன் குடியிருப்பு மக்கள் ஒன்று திரண்டு மணலுக்குள் புதைந்திருந்த ஆலயத்தை வெளிக் கொணர்ந்தனர். மணலுக்குள்ளிருந்து கிடைத்ததால் அவ்வன்னையை அதிசய மணல் மாதா என அழைத்து வழிபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் இந்த மணல் மாதா கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.