திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

திண்டுக்கல்லில் தாயை இழந்து தவிக்கும் மூன்று ஆட்டுக்குட்டிகளுக்கு நாய் ஒன்று பாலூட்டி தாய்ப்பாசத்தை காட்டி வருகிறது.


சாமியார் பட்டியை சேர்ந்தவர் சதுரமகாலிங்கம். இவர் தனது வீட்டில் நாட்டு ரக பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு ஆண்டாள் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆண்டாள் குட்டி ஈன்றுள்ளது. குட்டிகள் அனைத்தும் அழகாக இருந்த நிலையில் அந்தப்பக்கம் வந்தவர்கள் ஆளுக்கு ஒரு குட்டியாக தூக்கிச் சென்றுள்ளனர்.

குட்டிகளை இழந்த ஆண்டாள் சோகமாக சுற்றி வந்துள்ளது. இந்த நிலையில் சதுர மகாலிங்கம் வீட்டில் வளர்த்து வந்த ஆடு ஒன்றும் மூன்று குட்டிகளை ஈன்றது. அத்துடன் திடிரென அந்த ஆடு இறந்துவிட்டது. இதனால் தாய்ப்பால் இல்லாமல் குட்டிகள் மூன்றும் பரிதவித்து வந்தன.

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தாயை இழந்து தவித்த மூன்று குட்டிகளையும் தனது குட்டியாக பாவிக்கத் தொடங்கியது ஆண்டாள் நாய். அதுமட்டும் இல்லாமல் குட்டி ஆடுகளுக்கு பாலும் புகட்ட ஆரம்பித்தது.

விரும்பிய போதெல்லாம் ஆட்டுக் குட்டிகள் ஆண்டாள் நாயிடம் சென்று பால் குடிக்க ஆரம்பித்தன. இந்த தகவல் அறிந்து அந்த வழியாக செல்பவர்கள் அனைவரும் வந்து ஆண்டாள் நாயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தாய்ப்பாசம் என்பது இனத்தை தாண்டியும் பலமானது என்பதை திண்டுக்கல் ஆண்டாள் நாய் நிரூபித்துள்ளது.