9ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் திடீர் மரணம்..! காரணமோ மர்மம்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் 9ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாரவளர்ச்சி அலுவலகராக பணிபுரிந்து வரும் நந்தகுமார் காட்பாடி அடுத்த லத்தேரியில் வசித்து வருகிறார். இவருடைய 14 வயது மகள் நிவேதினி குடியாத்தம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது நிவேதினி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  

இதனால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர மீது தண்ணீர் தெளித்தனர். ஆனாலும் உபயோகம் இல்லை. பின்னர் உடனடியாக மாணவியை கே.வி.குப்பம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டனர்.

இதையடுத்து வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிவேதினி சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்கனவே இருந்ததா? அல்லது தற்கொலை முயற்சி ஏதேனும் மேற்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சகமாணவி ஒருவர் திடீரென உயிரிழந்ததால் மற்ற மாணவர்கள் வேதனையுடன் காணப்பட்டனர்.