சரியாக 9மணி..! 9 நிமிடங்கள்..! விளக்கு ஒளியில் ஜொலித்த தமிழ்நாடு..! நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போர்!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் சரியாக 9 மணி அளவில் பெரும்பாலான வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை பொதுமக்கள் ஏற்றியுள்ளனர்.


கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மக்கள் மத்தியில் பேசிய மோடி, கொரோனாவுக்கு எதிராக மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்தார். கொரோனா எனும் இருளை நீக்க மக்கள் தங்கள் வீடுகளில் இன்று 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்ற கேட்டுக் கொண்டார்.

மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு 9 நிமிடங்களுக்கு விளக்கு ஏற்றுவதன் மூலமும், டார்ச் லைட்டுகளை ஒளிர விடுவதன் மூலமும், செல்போன் டார்ச் விளகுகளை எரிய விடுவதன் மூலமும் கொரோனா எனும் இருளுக்கு எதிராக மக்கள் தங்கள் மனநிலையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பெரும்பாலானவர்கள் சரியாக இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்தனர். பிறகு மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, பூஜை விளக்கு போன்றவற்றை ஏற்றினர். சிலர் செல்போன் டார்ச் லைட்டுகளை எரிய வைத்தனர்.

இதனால் சென்னையில் முக்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை 9 மணி அளவில் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மோடி அழைப்பை ஏற்று மக்கள் கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றியது பலரையும் நெகிழ வைப்பதாக இருந்தது.