2 மகன்கள் இரு மகள்! ஆனாலும் கவனிக்க தயாரில்லை! சாலையில் வீசப்பட்ட 95 வயது தாய்! இதயத்தை நொறுக்கும் சம்பவம்! ஜெயங்கொண்டம் பரிதாபம்!

பாலூட்டி சீராட்டி வளர்த்த 4 குழந்தைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாமல் தாய் ஒருவர் சாலையில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.


மனிதர்கள் பிறக்கும்போது குழந்தையாக இருப்பதால் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்பதால்தான் அவர்களை வளர்த்து ஆளாக்க தாய், தந்தையை படைக்கிறான். பிற்காலங்களில் வயோதிகம் காரணமாக அவர்கள் குழந்தை பருவத்திற்கு செல்லும்போது அவர்களை கடைசி வரை பார்த்துக் கொள்ள பிள்ளைகள் தயாராகி விடுகிறார்கள். இது உலக நியதி.

ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் தான் ஒரு நிலைமைக்கு வந்தபோது பெற்றோரின் உதவி தேவை இல்லை என்ற நிலை வரும்போது அவர்களை சாலையில் குப்பையை போல் வீசிவிட்டு செல்கிறார்கள். இதுபோன்ற சம்பவம்தான் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. 

ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் 95 வயதான பட்டம்மாள் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.  

இந்நிலையில் மூதாட்டியை மகன்கள் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியில் கருணை உள்ளம் படைத்த ஒருவர் முதியோர் இல்லத்தில் பட்டம்மாளை சேர்த்து விட்டுள்ளார். சில நாட்கள் கழித்து மகன்களை பார்க்க முதியோர் இல்லத்தில் இருந்து பட்டம்மாள் வந்துள்ளார். ஆனால் இரு மகன்களும் வீட்டில் சேர்த்து கொள்ளாமல் துரத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் மகள் வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கியுள்ளார். பின்னர் மகளும் தாயை அழைத்து வந்து சகோதரர் வீட்டுத் திண்ணையில் படுக்க வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது

இதனால் ஆத்திரமடைந்த மூத்த மகன் மற்றொரு சகோதரர் வீட்டு வாசலில் பட்டம்மாளை தவிக்க விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து அவரும் தனது தாயை சாலையில் பரிதவிக்க விட்டுச் சென்றுள்ளார். நாலாபுறமும் கால்பந்து போல சாலையில் தூக்கி வீசப்பட்ட பட்டம்மாள் பொதுமக்கள் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் அளித்த புகாரின் பட்டம்மாளின் வாரிசுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகளை சாக்கடையில் வீசும் தாயை பார்த்து சமூகம் கொதிக்கிறது. குழந்தைகள் தாயை தூக்கி எறியும்போது அமைதி காக்கிறது.