நல்லகண்ணு நல்ல கம்யூனிஸ்ட் இல்லையா? அரசிடம் பிச்சை கேட்பது ஒரு தப்பா?

95 வயதான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவை அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றிய விவகாரம் காரம்சாரமாகப் போய்க்கொண்டு இருக்கும் நிலையில், நல்லகண்ணு நல்ல கம்யூனிஸ்டே இல்லை என்று ஒரு பதிவு உலா வருகிறது.


நல்லா இருந்த கட்சியை நாசமாக்கிய தா.பாண்டியனுக்கு துணை போனதுதான் காரணம் என்று பார்த்தால், அது இல்லையாம், என்னவென்று படித்துப் பாருங்கள்.

தோழர் நல்லகண்ணு உள்ளிட்ட பலரும் குடியிருந்து வந்த  சி.ஐ.டி. நகர் அரசுக் குடியிருப்பை பராமரிப்புப் பணிகளுக்காக  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இடிக்க வேண்டியுள்ளது.  இந்நிலையில் அக்குடியிருப்பில் வசித்து வந்த அனைவரையும் குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு அரசு கேட்டுக் கொண்டது. 

நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் அரசின் உத்தரவு ஒரே நேரத்தில் கிடைக்கப்பெற்றது.  இதில் தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒருவர். உத்தரவு கிடைக்கப் பெற்ற பலரும் மாற்று ஏற்பாடுகளைச் செய்து  கொண்டிருக்கும் நிலையில், தோழர் நல்லகண்ணு தரப்பில் இருந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இது மிகவும் துரதிருஷ்ட வசமானது. முற்றிலும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது.

சிமிஜி நகருக்கு அருகிலேயே தி நகரில் பாலன் இல்லம்  உள்ளது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பல  மாடிக் கட்டிடம் இது. இது நல்லகண்ணு சார்ந்துள்ள  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகம் ஆகும். வெளியேற்றும் உத்தரவு கிடைக்கப் பெற்ற  உடனேயே, தோழர் நல்லகண்ணு அவர்கள் மிகவும் கம்பீரமாக, பாலன் இல்லத்துக்குச் சென்று அங்கு  குடியேறி இருக்க வேண்டும். அப்படி ஓரு முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும். அல்லது அவருடைய கட்சியானது அந்த முடிவை எடுத்து, மேள தாளம் முழங்க அவரை பாலன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தி  இருக்க வேண்டும். இதுதான் ஒரு மெய்யான கம்யூனிஸ்ட்  அல்லது மெய்யான கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டியது.

இதற்கு மாறாக, அரசே வேறொரு வீட்டில் தன்னைக் குடியேற்ற வேண்டும் என்று கோருவதும், இதை  முதலாளிய குட்டி முதலாளியக் கட்சிகளைக் கொண்டு வழிமொழிவதும் மார்க்சிய நடைமுறை அல்ல.  அரசின் சலுகைக்கு ஏங்கி கிடப்பதும், சலுகை  இல்லாத நிலையில் அனலில் பட்ட புழு போலத் துடிப்பதும் அருவருக்கத்தக்க நடைமுறை ஆகும்.

கோடிக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக,  நடைபாதைவாசிகளாக வாழும் ஒரு சூழலில், ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்று அறியப்படும் ஒருவர் தமக்கென தனியாக வேறொரு வீடு கேட்டுக் கொடி பிடிப்பது எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுகளின் பண்பல்ல.

சுமார் 13 ஆண்டுக்கு முன்பு, தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அவரின் கட்சியினர் நிதி திரட்டி ரூ ஒரு கோடி நிதி வழங்கினர். அந்த ஒரு கோடி நிதியைக் கட்சியிடம் ஒப்படைத்து விட்டார் தோழர் நல்லகண்ணு. இந்தத் தொகை வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், இதன் மூலம் கிடைக்கும் வட்டியே மாதம் ரூ 30,000 இருக்கும். எனவே தோழர் நல்லகண்ணு அவர்களின் குடியமர்த்தலுக்குப் பொறுப்பேற்க வேண்டியது அவரின் கட்சியே.

அதைச்செய்ய மறுக்கும் கட்சி, தோழரின் கையில்  ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்து எடப்பாடி, பன்னீர் ஆகியோரிடம் இறைஞ்சி நிற்க வைத்துள்ளது. பாலன் இல்லம் மட்டுமல்ல, அருகில் சிந்தாதிரிப் பேட்டையில், கோவூர் வைத்தியநாத முதலி தெருவில் கட்சிக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கும் தங்கும் வசதிகள், அறைகள் என நிறைய உண்டு.

தமது துணைவியார் ரஞ்சிதம் அம்மையாரின்  மறைவுக்குப் பின்னர் ஒண்டிக்கட்டையாகத்தான் தோழர் நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். அவருக்கு வழங்க ஒரு எட்டடிக்குச்சு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இல்லையா?

இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் மூலம், கம்யூனிஸ்டுகள்  மீது கொஞ்ச நஞ்சம் இருந்த உயர்வான மதிப்பீடும்  அகன்று விட்டது. கம்யூனிஸ்டுகளும் ஏனைய குட்டி முதலாளித்துவ ஆசாமிகளைப் போன்றே, சலுகைக்கு ஆலாய்ப் பறக்கிறவர்கள், சலுகை இல்லாமல் போனால் புலம்பித தள்ளி விடுவார்கள் என்பதுதான் நல்லகண்ணு நிகழ்வு மூலம் உணர்த்தப்பட்டு இருக்கிறது.